3 - 7. நின்முன்றிணை.......................பெருமையின். உரை : நின் முன் திணை முதல்வர்க்கு - நின் குடியில் நினக்கு முன்னே விளங்கிய முன்னோர்களுக்கு ; ஓம்பினர் உறைந்து - பாதுகாப்பா யிருந்து ; மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் - மக்கட் கூட்டத்தைப் புரத்தற்கு வேண்டும் நெறிமுறைகளை அறிவுறுத்தும் ; நன்று அறி உள்ளத்து - அறமே காணும் உள்ளத்தையுடைய ; சான்றோர் அன்ன - அமைச்சர் போன்ற சூழ்ச்சிவன்மை படைத்த; நின் பண்பு - நினது இயல்பினை ; மடம் பெருமையின் - அறியாமை மிக வுடையராதல் ; நன்கு அறியார் - தெளிய அறியாராயினர் நின் பகைவர் எ - று. அரசர்க்கு “உற்றநோய் நீக்கி உறா அமை முற்காக்கும் பெற்றியார்” (குறள்.442) என்றற்கு, “முதல்வர்க்கு ஓம்பின ருறைந்து” என்றும், குடி யோம்பல் இறைமாட்சி யாதலின், “மன்பதை காப்ப” என்றும், அதற்கு வேண்டும் நெறிமுறைகளை உற்றவிடத்துக் கழறிக் கூறுதலும் அவர்க் கியல்பாதல்பற்றி, “அறிவு வலியுறுத்தும்” என்றும், அறம் வழுவியவழி அரசியல் நன்கு நடவாதாகலின், அதனையே தேர்ந்துணரும் அவ்வமைச்சர் மனப்பான்மையை, “நன்றறி யுள்ளத்துச் சான்றோர்” என்றும், அவரது சூழ்ச்சி முற்றும் இச் சேரமான்பால் செறிந்திருக்குமாறு தோன்ற அவரை உவமமாக நிறுத்தியும் கூறினார். பகைவேந்தரும் சூழ்ச்சி யுடையராயினும் அறியாமை மிகவுடைய ரென்றற்கு “மடம் பெருமையின்” என்றும், அதனால் நின் பண்பும் வலியும் அறிந்திலர் என்றற்கு “நின் பண்பு நன்கறியார்” என்றும் கூறினார் . அறிவு வலியுறுத்தும் சான்றோர், உள்ளத்துச் சான்றோர் என இயையும் பழையவுரைகாரரும், “மன்பதை மக்கட் பன்மை” யென்றும், “அறிவு வலியுறுத்தும் சான்றோர் எனக் கூட்டுக” என்றும், “ஈண்டுச் சான்றோரென்றது மந்திரிகளை” யென்றும் கூறுவர். மட மென்னும் எழுவாய் பெருமையின் என்னும் பயனிலை கொண்டது. 8 - 16. துஞ்சல்...................உடற்றிசி னோர்க்கே. உரை : துஞ்சல்உறூஉம் பகல் புகும் மாலை - எல்லாவுயிர்களும் ஒருங்கு அழிதற்குரிய ஊழிக்காலமானது புகுகின்ற பொழுதில் ; நிலம் பொறை ஒராஅ - நிலமகள் சுமை நீங்க ; நீர் ஞெமர வந்து ஈண்டி - நீர் பரந்து வந்து பெருகுதலால் ; உரவுத்திரை கடுகிய - பரந்தெழும் அலைகள் விரையும் ; உருத்தெழு வெள்ளம் - நிலத் துயிர்களைக் கோறற்குச் சினந் தெழுவதுபோலும் வெள்ளம் ; வரையா மாதிரத்து - எல்லை வரையறுக்கப்படாத திசை முழுதும்; இருள் சேர்பு பரந்து - இருளொடு சேர்ந்து பரவுவதால் ; அகன்றுவரு ஞாயிறு பட்ட கூட்டத்து - இருளைப் போக்குதற்குப் பன்னிரண்டாய் விரிந்து வரும் ஞாயிறுகள் தோன்றிய கூட்டத்தினது ; செஞ்சுடர் நிகழ்வின் - சிவந்த வெயில் நிகழ்ச்சியினையும் ; பொங்கு பிசிர் நுடக்கிய - மிகுகின்ற பிசிரினையுடைய அவ் வெள்ளத்தை |