40

பதிற்றுப்பத்தும் பதிகங்களும்

[ஆசிரியர் : திரு. T.V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள்,
ஆராய்ச்சி விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்]

அண்ணாமலைப்    பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சிப் பகுதியில்
விரிவுரையாளராகவுள்ள   என்னுடைய   அரிய  நண்பர்.  திருவாளர்
ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் எட்டுத்தொகை  நூல்களுள்
ஒன்றாகிய   பதிற்றுப்பத்துக்குச்  சிறந்த  புத்துரை  யொன்று  எழுதி
வந்தார்கள்.  ஒப்பற்ற சங்க நூற் பயிற்சியும் நூண்மாண்  நுழைபுலனும்
ஒருங்கே    படைத்துத்    தமிழகத்திலுள்ள    அறிஞர்   பலராலும்
பாராட்டப்பெறும்  அவர்களது பேருரையைக் கையெழுத்துப் பிரதியில்
யான் படிக்க நேர்ந்தபோது, அவ் வுரை விரைவில் வெளியிடப்பெறின்,
மிகக்  கடினமான  பதிற்றுப்பத்தை  யாவரும் எளிதில் படித்துணர்ந்து
கொள்ளலாம்  என்று  எண்ணினேன்.  அதற்கேற்ப,  சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்தின் செயற்றலைவரும் என்னுடைய  நண்பருமாகிய
திருவாளர்   வ.   சுப்பையாப்பிள்ளை   யவர்கள்   அந்   நூலைப்
பிள்ளையவர்களது  உரையுடன் வெளியிடும் பணியை ஏற்றுக்கொண்டு
அதனை  நிறைவேற்றினார்கள்.  இந்நிலையில்  நாடோறும் என்னோடு
ஆராய்ச்சித்துறையில்   அளவளாவிக்   கொண்டும்,   புதிய    புதிய
உண்மைகளை ஆராய்ந்துணர்ந்து வெளியிட்டுக்கொண்டும் வரும்  என்
நண்பர்  திரு  பிள்ளையவர்கள்  பதிற்றுப்பத்தின்  பதிகங்களைப்பற்றி
ஒரு      கட்டுரை      வரைந்து      தருமாறு      கூறினார்கள்.
அதனையேற்றுக்கொண்ட    யான்    அடியிற்காணும்   கட்டுரையை
எழுதியுள்ளேன்.

சங்கத்துச்     சான்றோர்    இயற்றியுள்ள     தொகைநூல்களுள்
பதிற்றுப்பத்தும்  புறநானூறும்  தனிச்  சிறப்புடையனவாகும்.   அவை
பண்டைக்காலத்தில்  நம்  தமிழகத்தில்  நிலவிய  முடியுடைத்   தமிழ்
வேந்தர்,  குறுநில  மன்னர்,  பிற  தலைவர்கள், புலவர் பெருமக்கள்,
நல்லிசைப்புலமை  நங்கையர் முதலானோரின் அரிய வரலாறுகளையும்
தமிழருடைய    பழைய   நாகரிக   நிலையினையும்   மற்றும்   பல
உண்மைகளையும் நம்மனோர்க்கு அறிவுறுத்தும் பெருங்  கருவூலங்கள்
எனலாம்.  சுருங்கச்  சொல்லுமிடத்து  அவை  தமிழ்நாட்டின் பழைய
வரலாற்று   நூல்கள்  என்று  கூறுவது  எவ்வாற்றானும்  பொருந்தும்.
புறப்பொருளைப்   பற்றுக்கோடாகக்   கொண்டெழுந்த   அவ்  விரு
நூல்களுள் பதிற்றுப்பத்து எனப்படுவது,