இதுவுமது. பெயர் : நிறந்திகழ் பாசிழை. 1 - 3. உரவோர் ................ வேந்தே. உரை : உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்- அறிவுடையோரை யெண்ணினாலும் அஃது இல்லாத மடவோரை யெண்ணினாலும் ; பிறர்க்கு நீ உவமம் வாயினல்லது - பிறர்க்கு நீ உவமமாக வாய்ப்பதன்றி ; நினக்குப் பிறர் உவமமாகா நினக்குப் பிறர் உவமமாகலாகாத ; ஒரு பெரு வேந்தே - ஒப்பற்ற பெருமையுடைய வேந்தே எ - று. உயர்ந்தோர் மடவோர் என்ற இருதிறத்தோர் பெருமை கூறலுறுவார்க்கு அவரின் உயர்ந்தோரை யுவமமாக வுரைத்தல்வேண்டுமென்பது பொருளிலக்கண மாதலின் (தொல். உவம. 3), உயர்வற வுயர்ந்த நின்னையே அவர்கட்கு உவமமாக வுரைத்தற் கமைந்தனை யென்பார், “பிறர்க்கு நீ வாயினல்லது நினக்குப் பிறருவமமாகா வேந்தே” யென்றும், ஆகாமைக்கு ஏது நினது உயர்வற வுயர்ந்த பெருமையென்பார், “ஒரு பெருவேந்தே” என்றும் கூறினார். உரவோர், படை மடம்படுதலறியாத அறிவுத்திண்மை யுடையோர் ; மடவோர், கொடைக்கண் மடம் படுவர் ; “கொடைமடம் படுதலல்லது, படைமடம் படான் பிறர் படைமயக்குறினே” (புறம். 142) என்று சான்றோர் கூறுதல் காண்க. பெருமை, உயர்வு குறித்து நின்றது. இனி உரவோர்தாம் எண் ணினும் மடவோர்தாம் எண்ணினும், இருதிறத்தோரும் நின்னையே உவமமாகக் கொண்டுரைப்ப ரென்றுமாம். 4 - 9. மருதம் ............மெய்ம்மறை. உரை : மருதம் சான்ற - மருத வளம் அமைந்த ; மலர் தலை விளைவயற் செய்யுள் - விரிந்த இடத்தையுடைய விளை புலங்களாகிய கழனிக்கண்ணே யுலவும் ; நாரை ஒய்யும் மகளிர் - நாரைகளை யோப்பும் மகளிர் ; இரவும் பகலும் பாசிழை களையார் - இரவு பகலென்ற இருபோதினும் தாமணிந்த பசிய பொன்னாற் செய்த - இழைகளைக்களையாராய் ; குறும்பல் யாணர்க்குரவை யயரும் - ஒன்றற்கொன்று அணித்தாய்ப் பலவாகிய இடங்களிலே புதிய புதிய குரவைக்கூத்தினையாடி மகிழும் ; காவிரி மண்டிய - காவிரியாற்றின் நீர் மிக்குள்ள ; சேய் விரி வனப்பின் -நெடுந்தொலைவிலேயே விரிந்து தோன்றும் |