உரைப்பத் தெளிகுவர் கொல்லென - பிறராகிய சான்றோரைக் கொண்டு தெரிவிப்பின் அவர் தெளிவரென முயன்றவழியும் ; ஆங்கும் மதிமருளக் காண்குவல் - அப்போழ்தும் அவர் அறிவுமயங்கி யிருப்பதையே கண்டேன் ; யாங்கு உரைப்பேன் என யான் வருந்துவல் - அதனால் அவர்கட்கு எவ்வாறு கூறித் தெளிவிக்க முடியுமென்று நினைந்து வருந்துகின்றேன் எ - று. வளம் முதலியன முறையே பொருள்வலி, தன் தோள் வலி, துணைவலி, படைவலி முதலியவற்றைச் சுட்டி நிற்றலால், இவற்றைத் தாம் எடுத்தோதியவாற்றை, “மாந்தர் அளவிறந்தன வெனப் பன்னாள் யான் சென்றுரைப்பவும்” என்றார். ஒருநாளொழியினும் பன்னாளுரைப்பின் அறிவு தெளிகுவ ரென்னும் துணிவால், “பன்னாள் சென்று உரைப்பவும் தேறார்” என்றார் உரைப்பவும் என்ற உம்மை தாமே அறியக்கடவதனை யாம் சொல்லவும் கூறுவோர் தகுதி நோக்கும் மெல்லியர் போலும் என்று கருதிப் பிறராகிய சான்றோரை விடுத்தவழியும், அவர்பால் மயக்கமே புலப்படுவதாயிற் றென்பார், “ஆங்கும் மதிமருளக் காண்குவல்” என்றும், அத்துணை மடமை நிறைந்தோரை ஒறுப்பது அறமாகாதாகலின், அவர் பொருட்டு இரங்குவதல்லது பிறிதொன்றும் செய்தற்கின்மையின், “வருந்துவல்யானே” என்றும் கூறினார். யாங்குரைப்பேனென மீட்டும் அவர்கட்குத் தகுவன கூறித் தெருட்டற்கண் தம் விழைவிருப்பதைப் புலப்படுத்துவதனால், அவர்பால் அருளலையே வேண்டினா ரென்பது கருத்தாயிற்று. “சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென என்றதன்பின், கருதின் என ஒரு சொல் வருவி்த்து அதனைக் காண்குவ லென்னும் வினையொடு முடிக்க” என்பர் பழையவுரைகாரர். இதுகாறுங் கூறியது ; ஒருபெரு வேந்தே புகார்ச்செல்வ, பூழியர் மெய்ம்மறை, கொல்லிப் பொருந. கொடித்தேர்ப் பொறைய, நின்வளனும் ஆண்மையும் கை வண்மையும் மாந்தர் அளவிறந்தன எனப் பன்னாள் சென்று யான் உரைப்பவும் நின் பகைவர் தேறார் ; பிற சான்றோருரைப்பத் தெளிகுவர் கொல்லென முயன்றவழி ஆங்கும் மதி மருளக் காண்குவல் ; யாங்குரைப்பேன் என வருந்துவல் ; ஆகவே அவரை அறியாமை யுடையர் என்றெண்ணி அருளுதல் வேண்டும் என்று முடிக்க. இனிப் பழையவுரை, “பெரு வேந்தே, புகார்ச் செல்வ, பூழியர் மெய்ம்மறை, கொல்லிப் பொருந, பொறைய, நின் பகைவர் நின் வளனும் ஆண்மையும் கை வண்மையும் உலகத்து மக்கள் அளவைக் கடந்தன ; அவனொடு மாறுபடுவது நுமக்கு உறுதியன்றெனப் பன்னாள் யான் சொல்லவும் தேறிற்றிலர் ; தேறாராயினும் உலகத்து மதிப்புடைய சான்றோர் சொல்லத் தாம் தேறுவரோ வெனக் கருதின் அவர் சொன்னவிடத்தும் அவர்கள் மதிமருண்டதுவே காணா நின்றேன் ; ஆகலான் நின் பெருமையை அவர்கட்கு யாங்குரைப்பேனென வருந்தா நின்றேன் யான் ; இஃது என்னுறு குறை ; இதனை யறிந்து நீ அவர் பால் அருள வேண்டுவலென வினைமுடிவு செய்க”, என்று கூறும். |