யெச்சத்தினை அருங்கடன் இறுத்த என்னும் வினையொடு கூட்டுக” என்றும், “உயர்ந்தோர் தேவ” ரென்றும் கூறுவர் . 22 - 28. அருங்கடன்..........................படிமையானே . உரை : அருங்கடன் இறுத்த - இந் நிலவுலகத்து வாழ்வார்க்கு அரசராயினார் செய்தற்குரிய அரிய கடன்களைச் செய்து முடித்த; செருப்புகல் முன்ப - போரை விரும்பும் வலியினையுடையோய் ; நின் வயின் அன்னவை மருண்டனென் அல்லேன் - நின்பால் கேள்வியும் வேள்வியும் புதல்வற்பேறுமாகிய அவையிற்றைக் கண்டு வியப்புற்ற னல்லேன் ; முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூதாளனை - உணரத் தகுவனவற்றை முழுதும் உணர்ந்து பிறர்க்கும் உணர்த்தி நன்னெறி யொழுகப்பண்ணும் நரையும் முதுமையுமுடைய புரோகிதனை ; நின் படிமையான் - நீ மேற்கொண்டிருக்கும் தவ வொழுக்கத்தால் ; வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாதும் தவம் உடையோர்க்கு என - கொடையும் குணவமைதியும் செல்வமும் மகப்பேறும் தெய்வவுணர்வும் பிறவும் முன்னைத் தவமுடையார்க்கே யுளவாவன என அறிவுறுத்தி; வேறுபடு நனந்தலை பெயரக் கூறினை - நாட்டின் வேறுபட்ட அகன்ற இடமாகிய காட்டிற்குத் தவங் குறித்துச் செல்லப் பணித்தனை ; பெரும - பெருமானே! இது கண்டன்றே யான் மருட்கை யெய்துவே னாயினேன் எ - று. அருங்கடன் இறுத்த முன்ப, செருப்புகல் முன்ப என இயையும். மகப்பேற்றால் இவணரையும், வேள்வி வேட்டலால் உயர்ந்தோரையும் ஓம்புதல்பற்றி “அருங்கடன் இறுத்த” என்றும், செருமேம்பட்டார்க்கன்றி இவ்வருங்கடன் எளிதில் இறுக்கலாகாமை தோன்ற, “செருப்புகல் முன்ப” என்றும் கூறினார். உயர் பொருளை யோதி யுணர்ந்தும் பிறர்க் குரைத்தும் தானொழுக வல்லவன் என்றற்குப் புரோகிதனை “முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூ தாளனை” என்றார் . நரைப்பும் முதுமையுமன்றி, வண்மையும் மாண்பு முதலாயின அவன்பால் பெறுக உளவாதல் வேண்டிச் சேரமான் இரக்கங் கொண்டு அவற்றைப் பெறுமாறு அறிவுக்கொடை வழங்கினான் என்பார், “வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கு என” அறிவுறுத்தினான் என்றார். எச்சம் புகழ்க் குரித்தாயினும், வண்மையும் மாண்பும் கூறவே அப் புகழும் அவற்றின்பால் அடங்குதலால் மக்கட் பேறாயி்ற்று . இனிப் பழையவுரைகாரர், “நரை மூதாளனை யென்றது, புரோகிதனை” யென்றும், “நரைமூதாளனைக் கூறினை யெனக் கூட்டி அவனைச் சொல்லி யேவினையென ஒருசொல் வருவித்து முடிக்க” என்றும், “மாண்பென்றது மாட்சிமையுடைய குணங்களை” யென்றும், “எச்சமென்றது பிள்ளைப்பேற்றினை” யென்றும், “தெய்வமென்றது தம்மால் வழிபடும் தெய்வத்தினை” யென்றும், “தவமுடையோர்க் கெனச் சொல்லி யென்க” என்றும், கூறினை யென்பது வினையெச்சமுற்” றென்றும், “வேறுபடு நனந்தலை யென்றது துறந்து போயிருக்கும் காட்டினை” யென்றும், “பெயர வென்றது அந்நரை மூதாளனைக் காட்டிலே பெயர வேண்டி” யென்றும் கூறுவர் . |