சேரமன்னர் பதின்மர்மீது பாடிய ஒரு தொகைநூல் ஒவ்வொரு பத்தும், பத்துப்பாடல்களைத் தன்னகத்துக்கொண்டது. இந் நூலின் முதற்பத்தும் இறுதி்ப்பத்தும் இக்காலத்தில் கிடைக்காமையின் இதனை இன்னார் வேண்ட இன்ன புலவர் தொகுத்தார் என்பது தெரியவில்லை. இதனைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் தாம் ஒவ்வொரு பதிகம் இயற்றிச் சேர்த்திருத்தலை நோக்குங்கால் அவர் சிறந்த புலவராயிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். ஒவ்வொரு பதிகத்திலும் அப் பத்தின் பாட்டுடைத் தலைவன் இன்ன வேந்தன் என்பதும் அவன் அருஞ்செயல்கள் இன்ன என்பதும் அவனைப் பத்துப்பாடல்களில் பாடிய புலவர் இன்னார் என்பதும் அப் பாடல்களின் பெயர்கள் இவை என்பதும் சொல்லப்பட்டுள்ளன. பதிகத்தைச் சார்ந்த உரைநடைப் பகுதியில் அப் பத்தினைப் பாடிய புலவர் பெற்ற பரிசிலும், வேந்தன் ஆட்சிபுரிந்த யாண்டின் தொகையும் கூறப்பட்டிருக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு பத்தின் இறுதியிலுள்ள பதிகமும் உரைநடைப் பகுதியும் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்பது ஒருதலை. பதிற்றுப்பத்தினைத் தொகுத் துதவிய புலவர் பெருந்தகை, பதிகங்களையும், உரைநடைப் பகுதிகளையும் சேர்க்காமலிருந்திருந்தால் இவ்வரிய நூலின் வரலாற்றினையும் அருமை பெருமைகளையும் பின்னுள்ளோர் அறிந்துகொள்வது இயலாததாகும். இனி, பதிகங்களின் அமைப்பினைப் பார்க்குங்கால் அவை பிற்காலச் சோழமன்னர்கள் தம் கல்வெட்டுக்களி்ன் தொடக்கத்தில் வரைந்துள்ள மெய்க்கீர்த்திகளை ஒருவாறு ஒத்துள்ளன எனலாம். கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தி எழுதத் தொடங்கியவன், முதல் இராசராச சோழன் ஆவன். அந் நிகழ்ச்சியும் அவ் வேந்தனது எட்டாம் ஆட்சியாண்டாகிய கி. பி. 993 - இல் தான் முதலில் நிகழ்ந்துள்ளது. எனவே, மெய்க்கீர்த்தியைப் பின்பற்றிப் பதிற்றுப்பத்தில் பதிகங்கள் அமைக்கப்பெற்றிருந்தால் அவை கி. பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு இயற்றப்பட்டனவாதல் வேண்டும்; ஆனால் பதிற்றுப்பத்தில் பதிகங்கள் இறுதியிலுள்ளன; கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்திகள் தொடக்கத்தில் உள்ளன. இவ் வேறுபாட்டை நுணுகி யாராயுமிடத்து முதல் இராசராசசோழனுக்குத் தன் கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தி யொன்று அமைக்கும் விருப்பத்தை யுண்டுபண்ணியவை, பதிற்றுப்பத்தி்லுள்ள பதிகங்களே என்று கருதுவதற்கு இடம் உளது. அவன் தன் ஆட்சியின் நான்காம் ஆண்டு முதல் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய கோ இராசகேசரி வர்மன்’ என்று தன்னைக் கூறிக் கொள்வதை அவன் கல்வெட்டுக்களில் காணலாம் எனவே கி. பி. 989 முதல் சேரநாட்டின் |