அறுக்கலுற்ற கரும்பென்றவாறு” என்றும், “இனி, அந்நெற்றான் கரும்பின் மிக எழுந்து அதனை நெருக்கினமையால் அந் நெல்லிற்கு இடமுண்டாக அறுத்த கரும்பு எனினுமாம்” என்றும் உரைப்பர் வரையாது வழங்கிய வழியும் வளம் குன்றாமைபற்றி, “வரையா வளம் வீங்கிருக்கை” என்றார். மிக்கு என்பதை மிக வெனத் திரிக்க. “தீஞ்சேறு இனிய பாகு” என்றும், “யாணரென்றது, அத் தீஞ்சேற்றது இடையற வின்மையை” என்றும் “இச் சிறப்பானே இதற்குத் தீஞ்சேற்றியாணர் என்று பெயராயிற்” றென்றும் பழைய வுரைகாரர் கூறுவர். நெல்லுக்கு வேலியாக நட்ட கரும்பு மிக வளர்ந்து அதன் வளர்ச்சி்க்கு இடையூறாவது கண்டு அதனைத் தடிந்துபெற்ற தீஞ்சேற்றியாணரை வருநர்க்கு வரையாது வழங்குவரென்றது, குடி புறந்தாராது அவர்க்கு இடையூறு விளைக்கும் கொடுங்கோலரசை வென்று, அவர்பாற் பெற்ற பொருளை வருநர்க்கு வரையாது வழங்கும் சேரமானது நற்செயல் உள்ளுறுத் துரைத்தவாறு. 8 - 14. வன்புலம்............................தவர்க்கே . உரை : வன்புலம்தழீஇயமென்பால்தோறும் - வன்னிலங்களைச் சாரவுள்ள மருத நிலங்கள் தோறும் ; மருபுல வினைஞர் - வித்தியது முளையாத களர் நிலத்தே தொழிலினைச் செய்யும் மறவர் ; புலவிகல் படுத்து - அம் மருதவயல்களைக் கோடல் குறித்து நிகழ்த்தும் மாறுபாட்டைக்கெடுத்தழித்து;கள்ளுடைநியமத்து ஒள்விலைகொடுக்கும் - அவர்பாற் பெற்றுக் கள் விற்கும் கடைகளில் கள்ளிற்கு விலையாகக் கொடுக்கும் ; வெள் வரகு உழுத கொள்ளுடைக் கரம்பை - உழுது வித்திய வெள்ளைவரகும் கொள்ளும் விளையும் கரம்பையாய் விடுதலால்;செந்நெல் வல்சி அறியார் - அவ்வரகும் கொள்ளு மல்லது செந்நெற்சோறு பெறாது வருந்துப வாகலின், அவர்க்கு - அவ் வேந்தர் முதலாயினார்க்கு ; தத்தம் பாடல் சான்றவைப்பின் நாடு தத்தம்முடைய புலவர் பாடும்புகழ் அமைந்த ஊர்களையுடைய நாட்டை ; உடன் ஆடல் யாவணது - ஒருங்கு ஆளுவது எங்ஙனம் கூடும் எ - று. எளிதில் உழுது வித்துதற்காகாத வன்னிலத்தைச் சார்ந்துள்ள மருத வயல்களை, “வன்புலந் தழீஇய மென்பால்” என்றார். மென்பாலில் நல்ல விளைவு உண்டாதலின், அதனைக் கோடற்கு ஏனை வன்புலத்து வாழும் மருநிலத்தார் விரும்பி முயல்ப வாதலாலும், அக்காலை மென்புலத்து வாழ்நர் அவரொடு பொருப வாதலாலும், அப்போரில் தோற்கும் மருபுல வினைஞர் தம்பால் உள்ள வரகும் கொள்ளும் தண்டமாகத் தருபவாதலாலும், “மருபுல வினைஞர் புலவிகல் படுத்து” என்றும், அத் தண்டப்பொருளும் கள்விலைக்கே பயன்படுகிறதென்பார், “கள்ளுடை நியமத்து ஒள்விலை கொடுக்கும் வெள்வர குழுதகொள்” என்றும் கூறினார். மருபுலம், களர்நிலம் “மருநில முழுத்தில் எரு மிகப்பெய்து, வித்திட்டாங்கே விளைபயன் கொள்ளச் |