பக்கம் எண் :

412

சித்தத்துன்னும்     மத்தர்    போலவும்” (திருக்கழுமல மும்மணி. 22:
16-8)  எனப்  பட்டினத்தடிகள்  கூறுவது   காண்க.  வன்புலந் தழீஇய
மென்பா  லென்றலின்,  வன்புலத்தார்   மென்புலத்தின்மேல் வழக்குத்
தொடுப்பராதலால்,  அதனைப்    “புலவிகல்”   என்றார்.   மென்புல
வினைஞரால் புல்லியவாகக்    கருதப்படும்    வரகும்    கொள்ளும்
வன்புலத்தார்க்கு  ஒண்பொருளாதலால்,  கள்ளிற்கு  அவற்றை உயரிய
பொருளாகக்  கொடுப்ப  ரென்பார், “ஒள்விலை கொடுக்கும்” என்றார்.
அவ்  வளம்   வீங்கு  இருக்கைகள் வெள்வரகும் கொள்ளும் வித்தும்
கரம்பையாய்   விடுதலால்,  “வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பை”
யென்றார்   கரம்பை  யென்புழி ஆதலின் என ஒரு சொல் வருவிக்க .
வளம் வீங்கிருக்கை,  கரம்பையாதலின், என இயையும். நன்னிலங்களை
யழித்துக்  கழுதை   யேர்பூட்டி  வெள்வரகும்  கொள்ளும்  வித்துதல்
பண்டையோர்  முறை  ;  “இருங்களந்தோறும், வெள்வாய்க் கழுதைப்
புல்லினம் பூட்டி, வெள்ளை  வரகும் கொள்ளும் வித்தும், வைகலுழவ”
(புறம்  .  392)  என்று  சான்றோர்  கூறுதல் காண்க . இவ்வாறு தாம்
இருக்கும்    இருக்கைகள்    கரம்பையாய்    விடுதலால்,   வேந்தர்
முதலாயினார்     செந்நெல்லுணவின்றி   வறுமையுற்று   வலிகுன்றின
ரென்பார்,  “செந்நெல்  வல்சி  யறியார்”  என்றும், எனவே, அவர்தம்
நாட்டை  இனிதாளுதல்  இல்லை யென்றற்கு, “நாடுட னாடல் யாவண
தவர்க்கே”  யென்றும்  கூறினார்.  “பாடல்  சான்ற  வைப்பின் நாடு”
என்றது, நாட்டின் நன்மை கூறி யிரங்கியது.

இதுகாறுங்     கூறியது  : பொறைய,  நீ  அரும்பொறி  வயமான்
அனையை   ;  வேந்தரும்  வேளிரும்  பிறரும்  கீழ்ப்பணிந்து  நின்
வழிப்படாராயின், அவருடைய வளம் வீங்கிருக்கை, கரம்பை யாதலின்,
செந்நெல்   வல்சி   யறியாராய்த்   தத்தம்  நாடுடனாடல்  அவர்க்கு
யாவணதாம்   என்பதாம்.  இனிப்  பழையவுரைகாரர்,  வன்புலந்தழீஇ
யென்று  பாடங்  கொண்டு,  அதனைக் கரம்பையொடு கூட்டி, இருந்து
என  ஒரு  சொல்  வருவித்து,  வன்புலம்  தழீஇ  யிருந்து  என்றும்,
மென்பால்தோறும்  இருந்து  என்றும்  இயைத்து,  “பொறைய, நீ புலி
கொன்று  களிறடூஉம்  வயமான்  அனையை  ; அதனால் வேந்தரும்
வேளிரும்     பிறரும்    நின்னடிக்    கீழ்ப்பணிந்து,    தமக்குரிய
மென்பால்கடோறும்  இருந்து  முன்  பணிந்தவாற்றிற் கேற்ப நின்வழி
யொழுகாராயின்,     அவர்கள்     வெள்வரகுழுத   கொள்ளுடைக்
கரம்பையாகிய  வன்பாலிலே கெட்டுப்போ யிருந்து ஆண்டு விளைந்த
வெள்வரகு   உண்பதன்றித்  தாம்  பண்டுண்ணும்  செந்நெல்  வல்சி
உண்ணக்கிடையாதபடி  மிடிபடுகின்றார்  ; தத்தம் நாட்டினை ஒருங்கு
ஆளுதல் அவர்க்கு யாவணது என வினை முடிவு செய்க” என்பர் .

“இதனாற் சொல்லியது அவன்    வென்றிச் சிறப்புக்  கூறியவாறா
யிற்று”