விட்டிறங்குதல் கண்கூடாதலின் “கால்கொண்டு” என்றார். கால்கொண்டென்பதற்குப் பெய்தலைத் தொடங்கி யென்றலுமாம். விதையின் பெருமையை நோக்க, உழுதற்குரிய ஏர்கள் சிறியவாதல் பற்றி, “பல்விதை யுழவிற் சில்லேராளர்” என்றார் . “அகல வுழுவதினும் ஆழ வுழுதல் வேண்டுமாதலால் அதற்கேற்ற பெருமையுடைய வாகாது சிறுமையுடை மைபற்றியே சில்லேராளர்” என்று கூறல் வேண்டிற்று . சின்மை, சிறுமை குறித்து நின்றது. பழையவுரைகாரரும், “சின்மையைச் சின்னூ லென்றது போல ஈண்டுச் சிறுமையாகக் கொள்க” என்றார். சில்லேராளர் உழுத படைச்சால் மிக ஆழமுடைத்தன் றாயினும், அதன்கண்ணும் அவர்கள் மிக்க விளைபயனேயன்றி உயரிய மணிகளைப் பெறுகின்றார்களென்பார், “சில்லேராளர் இலங்குகதிர்த் திருமணி பெறூ உம் நாடு” என்றார். பகன்றைமலர்க்கு வெளுத்த ஆடையை உவமை கூறுதலும், ஆடைக்கு அம்மலரை யுவமை கூறுதலும் சான்றோர் வழக்காகும் “போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன, அகன்றுமடி கலிங்க முடீஇச் செல்வமும், கேடின்று நல்குமதி பெரும” (புறம் . 393) என்று நல்லிறையனார் என்னும் சான்றோர் கூறுதல் காண்க. பகன்றையைக் கண்ணியாகத்தொடுத்தணிதலே பெரும்பான்மை வழக்காதலின், தெரியலென்றது கண்ணியெனக் கொள்ளப்பட்டது ; “பகன்றைக் கண்ணிப் பல்லான் கோலவர்” (ஐங். 87) என்றும், “பகன்றைக் கண்ணிப் பழையர்” (மலைபடு. 459) என்றும் வருதல் காண்க . சலவை செய்யப்பட்ட ஆடை யென்றற்குக் “கழுவுறு கலிங்கம்” என்றார். உயர்ந்த மணி யென்பார், “திருமணி” யென்றார் . பெருவருவாயுடைமை தோன்ற, அகன்கண் வைப்பின் நாடு என்று சிறப்பிக்கப்பட்டது. இனிப் பழையவுரைகாரர், “தண்டளி சொரிந்தென ஏராளர் கதிர்த் திருமணி பெறூஉம் நாடு எனக்கூட்டி, மழை பெய்தலானே ஏராளர் உழுது விளைத்துக்கோடலே யன்றி உழுத இடங்கள்தோறும் ஒளியையுடைய திருமணிகளை யெடுத்துக்கொள்ளும் நாடென வுரைக்க” என்றும், “பல்விதை யுழவின் சில்லே ராளரென்றது, பலவிதை யுழவாற் பெரியாராயினும் தம் குலத்தானும் ஒழுக்கத்தானும் சிறிய ஏராள ரென்றவா” றென்றும,் “பகன்றைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடித் திருமணி பெறூஉம் எனக் கூட்டி, பகன்றை மாலையைக் கழுவுறு கலிங்கம் ஒப்பச் சூடிக்கொண்டு நின்று திருமணிகளை யெடுக்குமென வுரைக்க” என்றும் கூறுவர். 1 - 9. களிறுடைப் பெருஞ் சமம்......................வந்தனென் . உரை : களிறு உடைப் பெருஞ்சமம் ததைய - களிறுகளைக் கொண்டு செய்யும் பெரிய போர் கெடுமாறு ; எஃகு உயர்த்து- வேலும் வாளும் ஏந்திச்சென்று ; ஒளிறு வாள் மன்னர் துதைநிலை கொன்று - விளங்குகின்ற வாளையுடைய பகை மன்னர் தம்மிற் கூடிநின்று பொரும் போர்நிலையைக் கொன்றழித்து ; முரசு கடிப்பு அடைய - வெற்றி முரசை அதன் கடிப்பு அறைந்து முழக்க ; அருந்துறை போகி - செய்தற்கரிய போர் செயற்குரிய துறை முற்றவும் கடைபோகச் சென்று ; பெருங்கடல் நீந்திய |