மரம் வலியுறுக்கும் பண்ணிய விலைஞர் போல - கடலைக்கடந்து சென்று மீளுதலால் பழுதுற்ற மரக்கலத்தின் பழுது போக்கிப் பண்டுபோல வலியுடைத்தாக்கும் கடல் வாணிகர்போல ; பெருங்கைத் தொழுதியின் புண்ணொரீஇவன் துயர் - கழிப்பிபெரிய கையையுடைய யானைக் கூட்டம் உற்ற போர்ப்புண்களை ஆற்றி அவற்றால் அவை துன்புற்ற வலிய துயரத்தையும் போக்கி ; இரந்தோர் வாழ நல்கி - முற்போதில் வந்து இரந்தவர் வறுமை நீங்கி வாழுமாறு கொடுத்து ; இரப்போர்க்கு - பிற்போதில் வந்து இரப்போருக்கும்;ஈதல் தண்டாத - ஈதலின் குன்றாத; மா சிதறு இருக்கை - குதிரைகளை வரையாது வழங்கும் நின் பாசறை இருப்பினை ; கண்டனென் செல்கு வந்தனென் - கண்டு போவான் வந்தேன் எ - று. களிறுடைமை போர்க்குப் பெருமை தருதலின், “களிறுடைப் பெருஞ் சமம்” என்றார்; “யானையுடைய படைகாண்டல் முன்னினிதே” (இனி . 40:5) என்று சான்றோர் கூறுதல் காண்க . ததைதல், கெடுதல்; “வேலுடைக் குழூஉச் சமந்ததைய நூறி” (பதிற். 66) எனப் பிறரும் கூறுதல் காண்க. துதை நிலை, கூடியிருக்கும் அணி வகுப்பு. அணிநிலையை யழித்த வழி, வீரர் படையும் பிற படைகளும் ஒழுங்கின்றித் தாறுமாறாய்ச் சிதறி எளிதில் அழிவராதலின், “துதை நிலை கொன்று” என்றார் . சிதைத்தென்னாது “கொன்” றென்றார். மறுவலும் துதைந்து நிலைபெறா வகையில் அழித்தமை தோன்ற, முரசு கடிப்பு அடைய என்றது. முரசு முழங்க என்றவாறு போர் முறை வெட்சி முதலாகப் பல்வகைப்படுதலின், “அருந்துறைபோகி” என்றார் . பெருங்கடலைப் பகைவர் படைக்கும், மரக்கலத்தைக் களிற்றுத் தொழுதிக்கும், பண்ணிய விலைஞரைச் சேரமான் வீரருக்கும் உவமமாகக் கொள்க . பெருங்காற்றும் பேரலையும் மோதுதலால் கட்டுத்தளர்ந்த கலத்தைக் , கரைசேர்ந்ததும் கட்டுடைத்தாக்கி வலியுறுத்தல் கலஞ் செலுத்துவோர்க்கு இன்றியமையாச் செய்தியாகும். பெருங்கடல் நீந்திய மரமென்றது, மரக்கலத்தை பல்வேறு பண்டங்களையும் கலத்திற்கொண்டு வேறு நாடு சென்று விற்றுப் பொருளீட்டுதல் பற்றிக் கலத்திற் செல்லும் கடல் வாணிகரைப் “பண்ணிய விலைஞர்” என்றார். யானைகட்குப் போரிலுண்டாகிய புண்ணால் மிக்க துயருண்டாவதையறிந்து புண்ணை யாற்று முகத்தால் துயர் போக்குதலால், “புண்ணொரீஇ வன்றுயர் கழிப்பி” யென்றார். வன்றுயர் என்றதனால், உற்ற புண் பெரும் புண்ணென் றறிக. இரந்தோர் இரப்போர் என இறப்பினும் எதிர்வினும் கூறியதனால் பிற்பொழுது முற்பொழுது கொள்ளப்பட்டன. முற்பொழுது வந்திரந்தோர் களிறு பெற்றுச் சென்றமையின், பிற்பொழுது வருவோர்க்குக் குதிரைகளை வழங்கலானானென வுணர்க . எண்ணிறந்தனவாதலின், குதிரைகளைச் சிதறினான் என்றார் ; இவை பகைவரிடத்தே பெற்றனவாம் . இனி, பழையவுரைகாரரும், “மா சித றிருக்கை யென்றது பகைவரிடத்துக் கொள்ளப்பட்ட மாக்களை வரையாது அளவிறக்கக் கொடுக்கும் பாசறை யிருக்கை யென்றவாறு” என்றும், “இச் சிறப்பானே இதற்கு மாசித றிருக்கையென்று பெயராயிற்” றென்றும் கூறுவர் . |