வெற்றியுண்டாகச் செய்யும் பெருஞ் சேரலிரும் பொறை ; எனைப் பெரும் படையனோ என்றனிராயின் - எத்துணைப் பெரியபடையையுடையவனோ என்று கேட்கின்றீராயின், கூறுவல் கேண்மின் எ - று. வம்பலர், புதுவோர் . “ஆரும் அருவும் ஈரொடு சிவணும்” (தொல். விளி. 21) என்றதனால், வம்பலிர் என வந்தது. இரந்தோர்க்கு எண்ணிறந்த களிறுகளையும் இரப்போர்க்கு அளவிறந்த மாக்களையும் சிதறுதலைக் காண்போர்க்கும், செல்லுமிடந்தோறும் வெற்றியே பெறக் காண்போர்க்கும் பொறையனது படைப் பெருமை யறிதற்கு வேட்கை நிகழுமாதலின், “எனைப் பெரும் படையனோ என்றனி ராயின்” என்றார். ஏனைப் பெரும் படையனோ என்றது வம்பலர் கூற்றினைக்கொண்டு கூறியது. சினத்தின் விளைவு போரும், அப் போரின் விளைவு வென்றியுமாதலின், “சினப்போர்ப் பொறையன்” என்று சிறப்பித்தார். கூறுதல் கேண்மின் என்பது எஞ்சி நின்றது. 3 - 7. மன்பதை.......................இலனே. உரை : மன்பதை பெயர - பகைப்படையிலுள்ள வீரர் அழிந்தோடவும் ; அரசு களத் தொழிய - பகையரசர் போர்க்களத்தே பட்டு வீழவும்; கொன்று - அப் பகைவரைக் கொன்று; தோளோச்சிய வென்றாடு துணங்கை - தோளையுயர்த்திக்கை வீசியாடியவென்றாடு துணங்கையினையுடையராய்ப் பட்டு வீழ்ந்த; மீ பிணத்து - அவர் பிணத்தின் மீது; உருண்டதேயா ஆழியின் உருண்டோடியவாய் தேயாத சக்கரத்தையுடைய; பண்ணமைதேரும்-கடுகிச் செல்லுதற்கேற்பப் பண்ணுதலமைந்ததேர்களும் ; மாவும் மாக்களும் - குதிரைகளும் காலாட்களும் ; எண்ணற் கருமையின் - எண்ண முடியாத அளவிலமைந்திருத்தலால் ; எண்ணின்றோ விலன் - எண்ணிற்றிலேன் எ - று. பகைவர் படைவீரரை மன்பதை (Mob) யென்றார், வீரர் எனப் படற்குரிய அழியாமை அவர்பால் இன்மையின் . உயிர் நீங்கியவழி அரச போகமும் பிறவும் ஒழிதலின், “அரசு களத்தொழிய” வென்றார். வீரர் போரில் பகைவரை வென்று அப்போர்க்களத்தே கையை வீசித் துணைங்கையாடித் தம் வென்றி மகிழ்ச்சியால் இன்புறுவ ராதலின், அக் கூத்தினை “வென்றாடு துணங்கை” யென்றார் . பழையவுரைகாரர், “வென்றாடு துணங்கைப் பிணம் என்றது, ஊர்களிலே யாடும் துணங்கை யன்றிக் களங்களிலே வென்றாடின துணங்கையையுடைய பிணம் என்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்கு வென்றாடு துணங்கை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர் . அரசு களத்தொழிய வென்றதற்குப் பழையவுரைகாரர், “அரசரைக் களத்திலே உடலொழிந்து கிடக்கக் கொன்றென்றவா” றென்றும், “கொன்று தோளோச்சிய பிணம் எனக் கூட்டி, முன்பு தம்முடன் பகைத்தவரைக் கொன்று தோளோச்சி யாடி இப்பொழுது இவன் களத்திற் பட்டுக் கிடக்கின்ற வீரர் பிணமென அவ் வீரர் செய்தியை அப் பிணத்தின் மேலேற்றிச் சொல்லியவாறாக வுரைக்க” என்றும், “மீ பிணத்தைப் பிணமீ |