ஆடுமிடத்து வளை பலவாயவழி ஒன்றினொன்று தாக்கியுடையுமாதலால் சிலவே யணிதல் அவட்கு இயல்பு என அறிக. இனி, பல்வளையிடும் பருவத்தாளல்லளென்பது தோன்ற இவ்வாறு கூறினாரென்றுமாம். சேரமான் பால் செல்லும் கருத்துடையளாதலைச் சொல்லாலும் குறிப்பாலும் தெரிவித்தாளாதலால் “செல்குவையாயின்” என்றார் . 4 - 14. வள்ளிதழ்.......................குன்றே . உரை : மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி - மெல்லிய இயல்பினையுடைய மகளிர் அசைந்து நடந்து மருத வயற்குச் சென்று ; வள்இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து - வளவிய இதழ்களையுடைய தாமரைப் பூவையும் நெய்தற் பூவையும் கொய்துகொண்டு ; புறவுதொறும் கிளி கடி மேவலர் நுவல முல்லைப் புலத்துக்குச் சென்று ஆண்டுள்ள புனந்தோறும் வந்து படியும் கிளிகளை யோப்பும் விருப்புடையராய்க் கிளி கடி பாட்டைப்பாட ; பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் பல்வகைப்பயன்களும் நிலைபெற்றகாட்டிடத்து ஊர்களையும்;வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில் இறும்பின் - வெல்லுகின்ற போரையுடைய வீரர் மறமே விரும்பிக் காத்தற் றொழிலைச் செய்யும் விற்படை நிரம்பிய காவற்காட்டையுமுடைய; தகடூர் நூறி - தகடூரை யழித்து; பேஎம் அமன்ற பிறழ நோக்கு இயவர் - கண்டார்க்கு அச்சத்தை யுண்டுபண்ணும் பகைவரைப் பிறழ்ந்து நோக்கும் பார்வையினையும் பல இயங்களையுமுடைய பகை வீரருடைய; ஓடுறு கடுமுரண் துமியச் சென்று - தம்மோடு எதிர்த்தார் தோற்றோடுதற்குக் காரணமான வலி கெடுமாறு மேற் சென்று; வெம்முனை தபுத்த காலை - அவரது கொடிய போர் முனையைப் பொருதழித்த காலத்து ; தம் நாட்டு யாடு பரந்தன்ன மாவின் - அப் பகைவர் நாட்டிலே ஆடுகள் பரந்தாற்போலப் பரந்து தோன்றும் குதிரைகளையும் ; ஆபரந்தன்ன யானையோன் குன்று-ஆக்கள் பரந்தாற் போலப் பரந்து தோன்றும் யானைகளையு முடையனாகிய சேரமானது குன்று. இயல்பாகவே மென்மைத்தன்மையும் அதனால் அசைந்த நடைய முடையவராதலின் மகளிரை, “மெல்லியல் மகளிர் ஒல்குவன ரியலி” யென்றார். தாமரையும் நெய்தலும் அரிந்தமை கூறியதனால், மருத வயல் பெறப்பட்டது. ஒடு, எண்ணொடு, அண்மையிலே முல்லைப்புறவு மிருத்தலின், மருதநிலஞ் சென்ற மகளிர், உடனே முல்லைப்புறவு சேறலையும் கூறினார் . புறவு சேறற்குக் காரணம் இஃதென்பார், “கிளி கடி. மேவலர்” என்றார் . முல்லை முதலிய நானிலப்பயனும் ஒருங்கு பெறுமாறு தோன்ற, “பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின்” என்றார். இனிப் பழையவுரைகாரர், “மகளிர் இயலி நெய்தலொடு தாமரை யரிந்து கிளிகடி மேவலர் புறவுதொறும் நுவலப் பல்பயன் நிலைஇய கடறு எனக் |