கூட்டிக் கிளிகடி மகளிர் நிலவணுமை யானே மருதநிலத்திலே சென்று நெய்தலொடு தாமரை யரிந்து, பின் கிளிகடி தொழிலை மேவுதலை யுடையராய்ப் புறவின் புனங்கடோறும் கிளிகடி பாடலை நுவலப் பல்பயங்களும் நிலைபெற்ற முல்லை நிலமென வுரைக்க” என்றார் . வைப்பினையும் இறும்பினையுமுடைய தகடூரென இயையும். “வைப்பின் தகடூர் எனக் கூட்டுக”, என்றும்,” ஆடவர் காக்கும் இறும்பெனக் கூட்டுக”, வென்றும் பழையவுரைகாரர் கூறுவர். வில்பயில் இறும்பு . வில்லேந்திய வீரர்படை யிருக்கும் இறும்பு பேஎம், அச்சம். கண்டார்க்கு அச்சத்தை யுண்டுபண்ணும் பார்வையினையுடைய வீரர், பகைவரை நேரே நோக்காது எடுத்தும் படுத்தும் கோட்டியும் பார்க்கும் இயல்புபற்றி, “பிறழ நோக்கியவ” ரென்றார் ; பழையவுரைகாரரும், “பிறழ நோக்கியவரென்றது, தம் சினமிகுதியானே மாற்றார் படைத்தோற்றத்தினை நெறியால் நோக்காது எடுத்தும் படுத்தும் கோட்டியும் பலபடப் பிறழ நோக்கும் பகைவராகிய பல்லிய முடையாரென்றவா”, றென்றும் “இச் சிறப்பானே இதற்குப் பிறழ நோக்கியவரென்று பெயராயிற்”, றென்றும் கூறுவர் . நெறியால் நோக்கிய வழி, படையிலுள்ளாரிற் பலர் இனியரும் நெருங்கிய முறையினருமாய்க் காணப்படுவரென்றும், அக்காலை யவர்பால் கண்ணோடுமாயின் மறம் வாடுமென்றும் கருதிப் பிறழ நோக்குவது வீரர்க்கு இயல்பாகலினாலும்; அப்பிறழ்ச்சி நோக்கிற்கு ஆண்டு இயம்பும் இயங்கள் துணையாகலினாலும் படைவீரரைப் “பிறழ நோக்கியவர்” என்றார் . இச் சிறப்பாலே இத் தொடர் இப்பாட்டிற்குப் பெயராயிற்றெனக் கோடல் சீரிதென வறிக . பிறழ்ச்சி நோக்கம் கண்டார்க்கு அச்சம் பயக்கும் தன்மைகள் நிறைந்திருத்தல் பற்றிப் “பேஎம் அமன்ற” என்றாரென்க. இனி இவ்வியவரது வலிநிலை கூறுவார். “ஓடுறு கடுமுரண்” என்றார். இவ்வியவர் தகடூரைக் காத்துநின்ற பகைவீரர் . அப்பகைவர் கொங்கராதலால்; அவர்பால் உள்ள யாடுகளின் பன்மையும் ஆக்களின் பன்மையும் உணர்த்துவார், “தந்நாட்டு யாடு பரந்தன்ன மாவின்” என்றும், “ஆபரந்தன்ன யானை” யென்றும் கூறினார் . பழையவுரைகாரர், “மாவினொடு வென ஒடுவிரித்து முனை தபுத்தகாலை மாவினொடு ஆ பரந்தன்ன யானையோஎ என வினைமுடிவு செய்க”, என்றார். 1 - 2. வலம்படு..............................யதுவே . உரை : உவ்வரை - உவ்வெல்லையில், உள்ள ; வலம்படு முரசின் - வெற்றியிடத்து முழங்கும் முரசுபோல ; இலங்குவன விழூஉம் அவ் வெள்ளருவி அது - முழக்கமும் விளக்கமு முடையவாய் வீழ்கின்ற அழகிய வெள்ளிய அருவிகளையுடைய அதுவாகும் எ - று. வரை, எல்லை. தோன்றுகின்ற குன்றுகளில் உயர்ந்து அருவிகளையுடைத்தாய்த் தோன்றும் குன்றினை “அது” எனச் சுட்டிக் காட்டுகின்றாராதலின், “உவ்வரை அவ் வெள்ளருவி யதுவே” என்றார். பெருமுழக்கம் எழுதலின், வெற்றி முரசினை யுவமம் கூறினார். “வலம்படு முரசு” எனவே, வெற்றி முரசாதல் பெற்றாம். விளக்கம் கூறவே முழக்க முண்மை பெறப்பட்டது. |