பக்கம் எண் :

423

குழைந்த     மாலை      யணிந்த     மார்பையுமுடைய  வேந்தே;
செருவத்தான் உயிர் போற்றலை - போரிலே நீ உயிரைப் பொருளாகக்
கருதிற்றிலை  ;  இரவலர்  நடுவண்  கொடை  போற்றலை  - பரிசில்
வேண்டிவரும்   இரப்போர்  கூட்டத்திலே   கொடுக்குஞ்   செயலில்
எதனையும்  என்றும்  வரைதலை  யறியாய்  ;  பெரியோர்ப் பேணிச்
சிறியோரை  அளித்தி - பெரியோர்களைத் தமராகப் பேணிக்கொண்டு
ஆற்றலாற்  சிறியராயினாரையும் புறக்கணியாது அருள் செய்கின்றாய் ;
பிரிந்த  நின்  வயின்  நல்லிசை  -  எல்லாத்  திசையினும்  சென்று
பரவியிருக்கும்  நின் நல்ல புகழ்கள் ; கனவினும் பிறர் நசை யறியா -
கனவிலும்  தம்மை  விரும்பும்  பிறரை  விரும்பிச்  செல்லாவாயின ;
அனைய    அளப்பருங்    குரையை   -   அத்   தன்மையவாகிய
அளத்தற்கரிய குணஞ் செயல்களை யுடையையாயிருக்கின்றாய் எ - று.

நாவிற்கு     விளக்கம், தான் வழங்கும் மெய்ம்மை மொழியாலும்,
செம்மை,  யாதொன்றும் தீமையிலாத சொல்லுதலாலுமாதலின் “வயங்கு
செந்நாவின்”  என்றார்.  பாடியர்,  படியோரென  நின்றது  ; படியார்,
வணங்காதார்  ;  “படியோர்த் தேய்த்த பணிவி லாண்மை”
1 (மலைபடு.
423)  என்று  பிறரும் கூறுதல் காண்க. படிதல், வணங்குதல். “படியோ
ரென்றது  பிரதியோ  ரென்னும்  வடமொழித் திரிவு” (அகம். 22) என
அகநானூற்று  அரும்பதவுரைகாரர்  கூறியது  சொன்னிலை  யுணராது
கூறியதாகலின் பொருந்தாமை யறிக. மகளிர் முயக்கிடை மார்பிலணிந்த
தாருமாலையுங்  குழையுமாதலின்  “தொடியோர் தோளிடைக் குழைந்த
கோதை  மார்ப”  என்றார்  ;  “காதல் கொள்ளாப், பல்லிருங் கூந்தல்
மகளிர்,  ஒல்லா  முயக்கிடைக் குழைக வென்தாரே” (புறம். 73) எனச்
சோழன் நலங்கிள்ளி கூற்றாலும் ஈதறியப்படும்.

செரு     : அம்முப்பெற்றுச் செருவமென வந்தது ; செருவின்கண்
பிறக்கும்  புகழ்  மேற்  சென்ற  வேட்கையால் உயிரைப் பொருளாகக்
கருதிற்றிலனாதல்,  “உயிர்  போற்றலையே செருவத்தானே” என்றார் ;
“சுழலுமிசை   வேண்டி   வேண்டா  வுயிரார்”  (குறள்.  777)  எனச்
சான்றோர்  கூறுதல்  காண்க. ஈத்துவக்கும் இன்பத்தாலும் ஈகைக்கண்
இசை  நிற்பதாலும் வரையாது வழங்கும் வண்மையுடையனாதல் கண்கு
“கொடை   போற்றலையே   இரவலர்   நடுவண்”  என்றார்.  கொடை
போற்றாமையாவது   “இன்று   செலினுந்  தருமே  சிறுவரை,  நின்று
செலினுந்  தருமே  பின்னும்,  முன்னே தந்தனெ னென்னாது துன்னி,
வைகலும்   செலினும்   பொய்யல   னாகி”  (புறம்.  171)  இரப்போர்
வேண்டிய  வேண்டியாங்கு  வழங்குவது. பெரியாரைப் பேணிக்கொளல்
அரசர்க்குப் பெருவன்மையாதலால், “பெரியோர்ப் பேணி” யென்றார் ;
“தம்மிற்  பெரியார்  தமரா  வொழுகுதல், வன்மையு ளெல்லாந் தலை”
(குறள்.  444) எனச் சான்றோரும் பணித்தார். சிறியோரென்றது அறிவு,
ஆண்மை,     பொருள்,     படை     முதலியவற்றால்    தன்னிற்
சிறுமையுடையாரை. அவரை


1. மறவேந்தர்க்குப்   படியாமையாவது   ஒட்டாத    பகைவரை
வணங்கிப்  பின்னில்லாமை ; அதனையுடைய வேந்தர் படியோர்
எனப்பட்டனரென அறிக.