இதுகாறும் தாம் பெற்றுப்போந்த வென்றியால் தம்மையே வியந்து தம் பட்டத்தியானைமேல் வந்தவர், போரிற்பட்டு வீழ்ந்தமையின், அவரது அவ் யானையைப் பற்றி அஃது ஆற்றாது கதறிப் புலம்பிப் பிளிற அதன் கோட்டினை யறுத்து அதனால் பலிக்கட்டில் செய்து கொண்ட செய்தியை “அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய கட்டில்” என்றும், கொற்றவைக்குப் பலியிடுவது குறித்து விழுப்புண்பட்ட வீரர் அதன்மீதிருந்து தம் மார்பிற் புண்ணினொழுகும் குருதி தெளித்து மடை கொடுப்ப, தெய்வமும் அதனை விரும்பி யேற்பது குறித்து அக் கட்டிலை, “அணங்குடை மரபிற் கட்டில்” என்றும், அதன் மீதிருந்து, குருதி விரவிய மடை கொடுப்பினன்றி யேலாத தெய்வம் அஞ்சத்தகும் முறைமை யுடைத்தாதல் பற்றி, “அஞ்சுவரு மரபிற் கடவுள்” என்றும் கூறினார். தும்பை சூடிப் பொரும் வீரர், பகைவரை யெறிகையில் தாமும் முகத்தினும் மார்பினும் புண்பட்டு மெய்தளர ஓய்ச்ச லெய்தியபோதும் தம் மார்பிற் புண்ணின் குருதியைச் சிறிதும் தயங்காது அள்ளி மடையின் புறத்தே தெறிப்பவாதலின், “தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து நிறம்படு குருதி” யென்றார். பழையவுரைகாரர், “தும்பை சான்ற மெய்தயங்குயக்கத்து நிறம்படு குருதி யென்றது, வீரருடைய, தும்பை சூடியதற்கேற்ப நின்று பொருதலாற்றலையுடைய உடலானது அசையும்படி வந்த ஓய்வினையுடைய நிறங்களைத் திறந்துவிட்ட குருதி யென்றவா” றென்றும், “அல்லாத இடங்களிற் குருதி கொள்ளாமையின் நிறங்களைத் திறக்க ஆண்டுண்டான குருதி யென்பதாயிற்” றென்றும், “இச் சிறப்பானே இதற்கு நிறம்படு குருதியென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். இவ்வாறே, “கோடறுத் தியற்றிய கட்டின்மேலிருந்து நிறம்படு குருதி புறம்படி னல்லது மடை யெதிர்கொள்ளாக் கடவுள் எனக்கூட்டி, அவ்வாறு செய்ததொரு கட்டில் கொடுவந்திட் டதன்மேலிருந்து அவ்வாறு கொடுப்பதொரு பலியுண்டாயினல்லது பலிகொள்ளாக் கடவுளென வுரைக்க” என்றும், “கட்டில்மேலிருந்தல்லது குருதி புறம்படி னல்லது என அல்ல தென்பதனை இரண்டிடத்தும் கூட்டிக் கொள்க” என்றும் கூறுவர். “நிறம்படு குருதி புறம்படி னல்லது மடை யெதிர்கொள்ளாக் கடவுள்” எனவே, கொற்றவை யென்பது பெற்றாம். அயிரை, சிராப் பள்ளிக்கு மேற்கில் காவிரியி்ன் தெற்கிலுள்ளதொரு குன்று ; இதனை இக்காலத்தார் ஐவர்மலையென்று வழங்குமென்பாருமுளர் பழையவுரைகாரர், “அது கொற்றவை யுறைவ தொருமலை” யென்பர். அயிரை மலை நின்று நிலைபெறுவதுபோல நின் புகழ்களும் நிலைபெற்று விளங்குக என்பார், “அயிரையின் நிலைஇக் கேடிலவாக நின் புகழே” யென்றார். இதுகாறும் கூறியவாற்றால், நாவினையும் ஆண்மையினையும் மார்பினையுமுடையோய் பெரும, செருவத்து உயிர் போற்றலை; இரவலர் நடுவண் கொடை போற்றலை ; பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி ; நின்வயி்ன் நல்லிசை கனவிலும் பிறர் நசை யறியா ; அனைய அளப்பருங் குரையை ; அதனால் நின் புகழ்கள் அயிரையின் நிலைஇக் கேடிலவாக என்பதாம். இனிப் பழையவுரைகாரர் “கோதை மார்ப, செருவத்து உயிர் |