பக்கம் எண் :

429

மாக்கழல்    புனைந்து” (பதிற். 37) என்றும், “இரும்பனம்    புடைய
லீகை  வான்கழல்”  (பதிற்.  42) என்றும், “இரும்பனம் புடையலொடு
வான்கழல் சிவப்ப” (பதிற். 57) என்றும், “புடையலங் கழற்கால் புல்லி”
(அகம்.    295)   என்றும்   இப்புடையல்   கழலொடு   பிணைத்தே
கூறப்படுதலின்,   இது  கழலணியும்  வீரர்  அடையாளமாகச்  சூடும்
பூமாலையாதல்  துணியப்படும்.  இரும்பனம்  புடையலெனத் தெரித்து
மொழிவதும்,  “புடையல்”  என  வாளாது  கூறுவதும்  இக் கருத்தை
வலியுறுத்துகின்றன.  ஈண்டுத்  தெவ்வர் சூடிய புடையலைத் தெரித்து
மொழியாமையின், பனம்புடையலெனக் கோடல் பொருந்தாமை யறிக.

அடிபிறக்கிடாத     மேற்கோள் வீரர்க்கு இன்றியமை யாமையின்,
“பிறக்கடி  யொதுங்காப்  பூட்கை”  என்றார் .  “அடியொதுங்கிப் பிற்
பெயராப்  படையோர்  (மதுரை. 37-8) என்று பிறரும் கூறுப. ஒடிதல்,
மறங்குன்றிப் பகைவர்க்கு வணங்குதல் ; அறைபோதலுமாம்.

இத்தகைய ஒடிவில் தெவ்வர் விறல் முரசம் முழங்க முற்றுகையிட்டு
நிற்பவும்,  அவர்முன்  சிறிதும்  அச்சமிலராய்  நின்று  வீறு  பேசும்
சேரமான்    வீரர்    மறநிலையை    “எதிர்நின்று”    என்பதனால்
தோற்றுவிக்கின்றார்.

9 - 17. உரைஇ....................தெம்முனையானே.

உரை :  உயர்ந்தோர் - நின்தானை வீரராகிய  உயர்ந்தோர்கள் ;
அம்புடை   வலத்தர்   -   இடக்   கையில்  வில்லும்  வலக்கையில்
அம்புமுடையராய்  ;  உரைஇ  - அத் தெவ்வர் முன்னே நின்று இரு
மருங்கும்  உலாவி  ;  புரவு எதிர்ந்தோற்கு  திறை  இடுக  -  திறை
செலுத்தித்  தன்  கோற்கீழ்ப்  பணிந்து  நிற்பார்க்குப் பாதுகாப்பினை
வழங்குதற்கு     ஏறட்டுக்கொண்டு   நிற்கும்    எங்கள்    பெருஞ்
சேரலிரும்பொறைக்கு நுங்கள் திறையினைச் செலுத்துவீராமின் ; எனப்
பரவ  - என்று நின்கொடையும் அளியும் தெறலும் பிறவும் பாராட்டிக்
கூற  ;  அனையை யாகன் மாறே - நீயும் அவர் கூறும் நலமெல்லாம்
உடையை  யாதலினாலே  ;  சினப் போர் - சினங் கொண்டு செய்யும்
போரினையும் ; நிலவரை நிறீஇய நல்லிசை நிலவுலகத்தே நிறுவப்பட்ட
நல்ல இசையினையும் ; தொலையாக் கற்ப - கேடில்லாத கல்வியினையு
முடையாய் ; நின் தெம்முனை யான் - நீ பகைகொண் டாற்றும் போர்
முனையாகிய;  புல வரை - தங்கள் நிலவெல்லையிற்றானும் ; பகைவர்
நின்  பகைவரது  ;  கால்  கிளர்ந்தன்ன  கதழ் பரிப் புரவி - காற்றுக்
கிளர்ந்து  சென்றாற் போலும் விரைந்த செலவினையுடைய குதிரைகள்
பூட்டிய  ;  கடும்பரி  நெடுந்தேர் மீமீசை - கடுஞ் செலவினையுடைய
நெடிய  தேர்  மீது  கட்டிய  ;  நுடங்கு  கொடி தோன்றுதல் யாவது
அசைகின்ற   கொடி   தோன்றுவது  எங்ஙனமாகும்  ;  இனி அஃது
எவ்வாற்றானும் தோன்றாது காண் எ - று.