புதல்வன் ஆவன். ஒன்பதாம் பத்தின் தலைவன் இளஞ்சேர லிரும்பொறை என்போன், பெருஞ்சேர லிரும்பொறையின் மகன் ஆவன். எனவே, இறுதியிலுள்ள மூன்று பத்துக்களும் செல்வக் கடுங்கோவாழியாதன், அவன் புதல்வன், அவன் பேரன் ஆகிய மூவர்மீதும் பாடப்பட்டவையாகும். இதுபோது கிடைக்காத இறுதிப் பத்து, யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையின்மீது பாடப்பெற்றிருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். அதனை ஒருதலையாகத் துணிதற்கு இயலவில்லை. ஆகவே, அஃது இன்னும் ஆராய்தற்குரிய தொன்றாகும். இனி, அச் சேரமன்னர் தம்மைப் பாடிய புலவர் பெருமக்கட்கு வழங்கியுள்ள பரிசில்களை நோக்குவாம்; இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குமட்டூர்க்கண்ணனார்க்கு உம்பற்காட்டில் ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாக வழங்கியதோடு தென்னாட்டு வருவாயுள் சில ஆண்டுகள் வரையில் பாகமும் அளித்தனன். அந்தணர்க்குக் கொடுக்கப்படும் இறையிலி நிலங்களே பிரமதாயம் என்று சொல்லப்படும், அவை பிரமதேயம் எனவும் பட்ட விருத்தி எனவும் முற்காலத்தில் வழங்கப்பட்டன என்பது பல கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. செல்வக் கடுங்கோவாழியாதன், கபிலர்க்குச் சிறுபுறமாக நூறாயிரம் பொற்காசும், நன்றா என்னும் குன்றின்மேல் ஏறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடுகளையும் வழங்கினான். அவ்வேந்தனுடைய பேரன் இளஞ்சேர லிரும்பொறையைப் பாடிய பெருங்குன்றூர்கிழார், ‘உவலைகூராக் கவலையினெஞ்சின் - நனவிற் பாடிய நல்லிசைக் - கபிலன்பெற்ற வூரினும்பலவே’ என்று பதிற்றுப்பத்தின் எண்பத்தைந்தாம் பாடலில் கூறியிருத்தலால், புலவர் பெருமானாகிய கபிலர் சேரநாட்டில் பிரமதேயமாகப் பெற்ற வூர்கள் பலவாதல் தெள்ளிது. ஒரே காலப் பகுதியில் சேரநாட்டிலிருந்த இவ் விரு வேந்தர்களின் பெருங் கொடைத்திறம் யாவர்க்கும் இறும்பூதளிக்கும் இயல்பினதாகும். பல்யானைச் செல்குழுகுட்டுவன், பாலைக் கௌதமனார் விரும்பியவாறு பத்துப் பெருவேள்விகள் செய்வித்து அப்புலவர் தம் மனைவியுடன் விண்ணுலகம் புகச்செய்தான். இவ்வரசனுடைய தமையன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய அரும்பெறற் புதல்வராகிய இளங்கோவடிகள், தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் ‘நான்மறை யாளன் செய்யுட் கொண்டு, மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும்’ என்ற அடிகளில் இந் நிகழ்ச்சியைக் குறித்திருத்தல் காணலாம். இவ் வேந்தன் இறுதியில் துறவுபூண்டு காடுபோந்தனன் என்பர். |