போர் வீரர்க்கு வேண்டும் உயர்குணங்களெல்லாம் ஒருங்குடைமை பற்றி “உயர்ந்தோர்” என்றார். பகை வீரருடைய மார்பு முதலியவற்றை விதந்து கூறிய ஆசிரியர், அவர்களை உயர்ந்தோ ரென்றது, அவர்கட்கு அக் கூறிய சிறப்பனைத்தும் ஆரவார மாத்திரையே என வற்புறுத்தியவாறு . அம்புடை வலத்தரெனவே, வில்லுடைமை தானே பெறப்படுமாகலின், அது கூறாராயினார். இனி, அம்புடை வலத்தர் என்றற்கு, அம்பினாலாகிய வெற்றியையுடைய ரென்றுமாம் . தெவ்வர் முன் நின்று இவ்வுயர்ந்தோர் சேரனுடைய தலைமைப்பண்புகளையும் ஆண்மை வண்மைகளையும் பரவிக் கூறலுற்றோர், தம் கூற்று பகைவர் படைப்பரப்பு முற்றும் கேட்டல் வேண்டி இருமருங்கும் உலவிச் சென்று உரைத்தார் என்றற்கு “உரைஇ” யென்றும், படை திரண்டு போர் குறித்து வந்தீராயினும் திறையிடின் எங்கள் இறைவன் நுங்களைப் பொறுத்துப் புரவு பூண்பன் என்பார், “இடுக திறையே புரவெதிர்ந் தோற்கே” என்றார்கள் என்றும் கூறினர். அவ்வுயர்ந்தோர் நின்னைப் பற்றிக் கூறிய அனைத்தும் மெய்யே யென்பார், “அனையை யாகன் மாறே” யென்றார். மாறு, மூன்றாம் வேற்றுமைப் பொருட்டு. பகைவரது குதிரையின் திறம் கூறுவர். “கால்கிளர்ந் தன்ன கடும்பரிப் புரவி” யென்றும், அவற்றைப் பூட்டும் தேரும் இத்தகைய தென்றற்குக் “கடும்புரி நெடுந்தேர்” என்றும், “கால்கிளர்ந் தன்ன வேழம்” (முருகு) என்றும் சான்றோர் விரைந்த நடைக்குக் காற்றை உவமம் கூறுவது காண்க . சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது . நின் நல்லிசை நிலவரை முழுதும் பரவி நிலைபெறுதலின், பகைவரது கொடி நுடங்குதற்கும் இடனில்லை என்பது கூறியவாறு . நல்லிசை நிறுவுதற்கேற்ற கல்வியும் மிக வுடையாய் என்பார், “தொலையாக் கற்ப” என்றார். இனி, பழையவுரைகாரர், “புரவெதிர்ந்தோற்கென்றது கொடையேற்றிருக்கின்ற அவனுக்கென்றவா” றென்றும், “கொடி தோன்றல் என்றதனை எழுவாயும் பயனிலையுமாகக் கொள்க” என்றும், “நின் தெம்முனைப் புலவரையான் என மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். இதுகாறும் கூறியது, களிற்றியானை கணங்கொள்ள, அவர் எறிந்த முரசம் முழங்கவும், மார்பினையும், முன்கையினையும், தோளினையும், புடையலையும், கழற்காலையும், பூட்கையினையும், வாளினையுமுடைய ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று, உயர்ந்தோர், அம்புடைய வலத்தராய் உரைஇ புரவெதிர்ந்தோற்கு இடுக திறையே யெனப்பரவ, அனையை யாகன்மாறே, சினப்போரும் நல்லிசையும் கற்பினையு முடையாய், நின் தெம்முனையாகிய புலவரையில், பகைவர் கதழ்பரிப் புரவிக் கடுந்தேர் மீமிசை நெடுங்கொடி தோன்றல் யாவது என்பதாம். இனி பழையவுரைகாரர், “தொலையாக் கற்ப, நின் வீரராகிய உயர்ந்தோர் நின் தெவ்வராகிய அவருடைய களிற்றியானை மலையிற் கணங் கொள்ளா நிற்க, முரசம் கடிது முழங்காநிற்க, அவை யிற்றை ஒன்றும் மதியாதே நின்னோடு ஒடிவில் தெவ்வராகிய அவர் எதிர்நின்று பெயரா இப்புர வெதிர்ந்தோனுக்குத் திறையை யிடுக வெனச் சொல்லி நின்னைப் பரவும்படி நீ அதற்கேற்ற தன்மையை யுடையையானபடியாலே நின் தெம்முனைப்பல வெல்லையில் நின் பகைவர் தேர்மிசைக் கொடி போரைக் குறித்துத் தோன்றல் யாது எனக்கூட்டி வினை முடிவு செய்க" என்பர். |