துறை : முல்லை. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : நிழல்விடு கட்டி. 1 - 5. உலகம் ............... புலம்புகொள. உரை : உலகம் புரக்கும் - உலகத்திலுள்ள உயிர்களைப் பாதுகாத்தலைச் செய்யும் ; உருகெழு சிறப்பின் - உட்குதலைச் செய்யும் சிறப்பினையும் ; வண்ணக் கருவிய - கரிய நிறத்தையுமுடைய பலவாய்த் தொகுதி கொண்டனவாகிய ; வளங்கெழு கமஞ்சூல் வளம் பொருந்திய நிறைந்த நீரையுடைய மழை மேகங்கள் ; அகல் இரு விசும்பின் - அகன்ற கரிய வானத்தின்கண் ; அதிர் சினம் சிறந்து எல்லாப் பொருளும் அதிரும்படி மின்னிக் குமுறி ; கடுஞ் சிலையொடு கழறி - மிக்க முழக்கத்தோடு இடித்து ; விசும்பு அடையூஉ - நிவந்து - வான முழுதும் பரந்துயர்ந்து ; காலை யிசைக்கும் பொழுதொடு - கார்காலத்தைத் தெரிவிக்கும் பருவத்தால் ; புலம்பு கொள உயிர்கள் வருத்தமெய்த எ - று. உலகம் புரக்கும் வளங்கெழு கமஞ்சூல் என்றும், சிறப்பினையும் வண்ணத்தினையுமுடையவாய்க் கருவியாகிய கமஞ்சூல் என்றும் இயையும். மழையின்றிப் பொய்ப்பின் உலகத்துள் பசிநின்று உடற்றுமாதலின், “உலகம் புரக்கும் கமஞ்சூல்” என்றும், துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் தருதலின் “வளங்கெழு கமஞ்சூல்” என்றும், இடி மின்னல் முதலியவற்றால் உயிர்கட்கு அச்சத்தை விளைத்தலின் “உருகெழு சிறப்பின் கமஞ்சூல்” என்றும், பலவாய்த் தொக்கு இருண்டு வருதலின், “வண்ணக்கருவிய கமஞ்சூல்” என்றும் கூறினார். இரு விசும்பு மிக அகன்றதாயினும் அதனிடமுழுதும் அதிரக் குமுறுதல் பற்றி, “அகலிரு விசும்பின் அதிர்சினம் சிறந்து” என்றார். கமஞ்சூல், கமஞ்சூலையுடைய மேகத்துக்காயிற்று. கமம், நிறைவு. “கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை” (முருகு. 7) என்று பிறரும் கூறுதல் காண்க. அதிர்சினம், முகிற் கூட்டத்தின் குமுறலையும், கடுஞ்சிலை பேரிடியினையும் குறித்து நின்றன. மழை மிக்குப் பெய்தலால் மாவும் புள்ளும் குளிரால் ஒடுங்கி வருந்துதலின், “புலம்பு கொள” என்றார். இனிப் பழையவுரைகாரர், “கமஞ்சூல், மேகங்க” ளென்றும், “நிறைந்த சூலுடைமையின் மேகங்கள் கமஞ்சூல் எனப்பட்டன” என்றும், “சிலையொடு |