கழறியென ஒடு விரிக்க” என்றும், “சிலை, முழங்குதல் ; கழறல், இடித்தல்” என்றும், “நிவந்து விசும்படையூ வென மாறிக் கூட்டுக” என்றும், “விசும்படைதல் மலையிலே படிந்தவை எழுந்து விசும்பை யடைதல்” என்றும், “காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொள வென்றது மேகங்கள் கார்காலத்தை அறிவிக்கின்ற பருவத்தானே வருத்தம் கொள்ளாநிற்க வென்றவா” றென்றும் கூறுவர். 6 - 14. களிறு...........கொட்ப. உரை : களிறு பாய்ந்து இயல - களிறுகள் பாசறை யெல்லையிற் பரந்து இயங்க ; கடுமா தாங்க - விரைந்து செல்லும் குதிரைகள் வீரர்களைச் சுமந்து அவர் குறிப்புவழிச் செல்ல ; ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப - விளங்குகின்ற கொடிகள் அசையத் தேர்கள் நாற்றிசையும் சுழன்று திரிய ; அரசு புறத்து இறுப்பினும் - பகையரசர் தம் நகர்ப்புறத்தே முற்றுகையிட்டுத் தங்கினும் ; அதர்விலர் - சிறிதும் நடுக்கமிலராய்; வாயில்கொள்ளா மைந்தினர் வயவர் - தமக்குரிய இடங்கட்குக் காவல் கொள்ளாத வலிமையினை யுடையராகிய வீரர் ; மாயிருங் கங்குலும் - பெரிய இருள் நிறைந்த இராக் காலத்தும் ; விழுத்தொடி சுடர்வர - தம் தோளிலணிந்த வீரவளை ஒளி திகழு ; தோள் பிணி மீகையர் - தோளிடத்தே பிணிக்கப்பட்ட மீகை யினையுடையராய் ; நாளும் முடிதல் வேட்கையர் - போரிற் புண்பட்டு வீழ்தலை விரும்பும் வேட்கையராய் ; புகல் சிறந்து - போர் விருப்பம் மிக்கு ; நெடிய மொழியூஉ - வஞ்சினம் கூறி அவ்வஞ்சினம் தப்பாமல் ; தம் குடி கெடாஅ நல்லிசை நிறுமார் - தாம் பிறந்த குடிக்குக் கெடாத நல்ல புகழை நிலைநிறுத்துதற்கு ; இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப - அளவிடப்படாத எல்லையால் அகன்ற பாசறைக்கண்ணே சுழன்று திரிய எ - று. பாய்தல், பரத்தல். பருவுடம்பினவாதலின், களிறுகளின் இயக்கத்தைப் “பாய்ந்தியல” வென்றார். கடுமா என்புழிக் கடுமை விரைவு குறித்து நின்றது. தாங்க வென்றதனால், வீரர்களைச் சுமத்தல் பெற்றாம். வாயில் காவல் மிக்க வலியுடையராயினும் பகையரசர் புறத்திறுத்த வழி, மதிற் காவல்கொள்ளா தொழியா ரென்பது தோன்ற, “வாயில் கொள்ளா மைந்தினர்” என்றார். வாயில் கொள்ளாமைக்கேது மைந்துடைமை யென்றாராயினும், அதனைப் புலப்படுக்கும் நடுக்கமின்மையை “அதிர்விலர்” என எடுத்தோதினார். இராக்காலத்தே போர் நிகழ்தலின்மையின், “மாயிருங்கங்குலும்” என்றார். மீகை, தோள்மேலணியும் சட்டை. சட்டையின் கை, தோளை மூடி அதன்மேலே உயர்ந்து தோன்றலின் மீகை யெனப்பட்டது. இனிப் பழையவுரைகாரர், “வாயில் கொள்ளா மைந்தினரென்றது தமக்குக் காவலடைத்த இடங்களைச் சென்று கைக்கொள்ளா வலியினை யுடையவரென்றவா” றென்றும், “வாயில் ஈண்டு இடம்” என்றும், “தோள்பிணி மீகையரென்றது குளிராலே தோளைப் பிணித்த அத்தோள் மீது உளவாகிய கைகளையுடைய ரென்றவா” றென்றும், கூறுவர். |