வலிப்ப” என்றார். “கட்டளை வலித்தலென்பது இன்னார் இன்னதனைப் பெறுக என்று தரங்களை நிச்சயித்தல்” என்பது பழையவுரை. தானை யென்புழி நான்கனுருபு விரிக்க. வேறு புலத்திறுத்தவழி வேந்தன் செய்வன இவை யென்கின்றாராதலின், “வேறு புலத்திறுத்த வெல்போ ரண்ணல்” என்றுரைக்கின்றார். 19 - 23. முழவின் - ஈயும் உரை : காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர் -காந்தட் பூவால் தொடுத்த கண்ணி சூடிய செழித்த குடியினையுடைய செல்வ மக்கள் ; முழுவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து - முழவு போன்றமைந்த பெரிய பலாப்பழத்தை யுண்டு ; சாறயர்ந்தன்ன - விழாக் கொண்டாடினாற்போல ; யாணர் கார் அணி தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்தி - புதுமையினையுடைய கரிய அழகிய மூங்கிற் குழாயிடத்தே பெய்து முதிர்வித்த இனிய கள்ளை யருந்தி ; கலி மகிழ் மேவலர் - ஆரவாரத்தையுடைய மகிழ்ச்சியை விரும்பி ; இரவலர்க்கு ஈயும் - இரப்போர்க்கு வேண்டுவனவற்றை யீதலைச் செய்யும் கொல்லி நாட்டிலுள்ள எ - று. கொல்லிமலையைச் சூழ்ந்த நாட்டைக் கொல்லிக்கூற்ற மென்பர். அந்நாட்டவர் குறிஞ்சி நிலத்து மக்களாதலின், அந்நாட்டுச் செல்வர் காந்தட்கண்ணி சூடுதலை விதந்து, “காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்றார் . அங்கே, பலாப்பழம் மிகுதியும் கிடைப்பது இக் காலத்தும் உண்மை. “கலையுணக் கிழித்த முழவுமருள் பெரும்பழம்” (புறம் . 236) என்பவாகலின், ஈண்டும் பலாப்பழம், “முழவினமைந்த பெரும்பழ” மெனப்பட்டது. விழாக்காலத்துச் சுற்றமும் பிறரும் சூழவுண்டல்போல, ஏனைக்காலத்தும் உண்டு மகிழ்தலைச், “சாறயர்ந் தன்ன தீம்பிழி மாந்தி” என்றதனாலும், இனிய கள்ளை மூங்கிற் குழாயிடத்தே பெய்து புளிப்பு முதிர்விக்கும் இயல்பை, “நீடமை விளைந்த தேக்கட்டேறல்” (முருகு . 195) என்பதனாலு மறிக. இரவலர்க்கீயும் கொல்லியென முடிக்க. பழையவுரைகாரரும், “சாறயர்ந் தன்ன தீம்பிழியென முடித்து விழாக் கொண்டாடினா லொத்த இனிய மதுவென வுரைக்க” என்றும், “காரணி யாணர்த் தூம்பு என்றது கருமையைப் பொருந்தின அழகிய மூங்கிற் குழாய் என்றவா” றென்றும் கூறுவர். 24 - 32. சுரும்பு ....................நெடுந்தேர் உரை : சுரும்பார்சோலைப் பெரும் பெயர்க்கொல்லிவண்டுகள் பொருந்திய சோலை சூழ்ந்த பெரிய பெயரையுடைய கொல்லிமலையில் உண்டாகிய ; பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து - இருவாட்சிப் பூக்களுடன் பச்சிலையைத் தொடுத்தணிந்து ; மின் உமிழ்ந்தன்ன சுடரிழை யாயத்து - மின்னலை உமிழ்ந்தாற் போன்ற ஒளிதிகழும் அணிகளையுடைய ஆயமகளிர்படைசூ ழவுள்ள;தன் நிறங்கரந்தவண்டுபடு கதுப்பின் - தன் நிறம் மறையும்படியான வண்டு மொய்க்கும் கூந்தலும் ; |