பக்கம் எண் :

438

ஒடுங்கீரோதி     யொண்ணுதல் முன் மயிரின் சுருள்   தவழும் ஒளி
பொருந்திய நெற்றியும் ; அணிகொள் - முறையே பூவாலும் ஒளியாலும்
அழகு  மிகுமாறு  ;  கொடுங்குழைக்  கமர்த்த நோக்கின் - வளைந்த
குழையொடு  பொருத  பார்வையினையும்  ;  பெருந்தகைக்கு  நயவர
அமர்ந்த  மென்சொல்  -  தன்  பெருங்குணங்கட்கு  ஏற்ப அமைந்த
மெல்லிய  சொல்லினையும் ; திருமுகத்து மாணிழை யரிவை - அழகிய
முகத்தையும்     மாட்சிமைப்பட்ட        அணிகலன்களையுமுடைய
அரிவையாகிய நின் தேவியை ; காணிய - காண்பதற்காக ; ஒருநாள் -
ஒருநாளேனும்  ; நின் புரவி நெடுந்தேர் பூண்க - நின்னுடைய குதிரை
பூட்டிய தேர் ஏறுவாயாக எ - று.

பெருவாய்    மலர், இருவாட்சிப்பூ. இதனை இருள்வாசி யென்றும்
நள்ளிருணாறி யென்றுங் கூறுப . “நரந்த நாக நள்ளிரு ணாறி” என்று
குறிஞ்சிப்பாட்டுக்  கூறுகின்றது  .  பசும்பிடி,  பச்சிலைப்பூ ; இதனை
இக்காலத்தார் மனோரஞ்சிதம் என்பர்; “பசும்பிடி வகுளம் பல்லிணர்க்
காயா”   (குறிஞ்  .   70)   என   வருதல்   காண்க.  “இருவாட்சி
முதலியவற்றையும்   சுடரிழை   யினையுமுடைய  ஆயமகளிர்  எனச்
சிறப்பித்தவர்,  அரசமாதேவி  அத்தகைய  பூ  வொன்றும்  அணிந்து
கொள்ளாது   பிரிவுத்    துயருற்றிருந்தமை    தோன்ற,    ஒன்றும்
கூறாராயினாரென     வுணர்க.    மகி்ழந்தென்பதற்கு,    “விரும்பிச்
சூடியென்றவா”   றென்றும்,  “மின்னுமிழ்ந்தன்ன  சுடரிழை யென்றது,
மேகம்    மின்களை   உமிழ்ந்தாற்    போன்ற   சுடர்களையுடைய
இழையென்றவா” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.

தலைமயிரின்  கருமை வண்டினம் மிக்குப்படுதலால் தெரியாதாயிற்
றென்றற்கு,  “தன்னிறம்  கரந்த  வண்டுபடு  கதுப்பின்” என்றும் ஒளி
திகழும்  நெற்றியிடத்தே  சுருண்டு  தவழ்தலின்,  முன்மயிரை “ஒடுங்
கீரோதி”  யென்றும், பிரிவுத் துன்பத்தால் உளதாகிய பசலையால் ஒளி
மழுங்கி   யிருத்தல்பற்றி,  “ஒண்ணுத”  லென்றும்,  அரசன்  எய்தித்
தன்னைத்  தலைக்கூடிய  வழி,  கூந்தல் பூவணிந்து சிறத்தலும் நுதல்
நல்லொளிகொண்டு திகழ்தலும் ஒருதலையாதல்பற்றி, “தன்னிறம் கரந்த
வண்டுபடு கதுப்பின்  ஒடுங்கீரோதி யொண்ணுத லணிகொள” என்றும்
கூறினார்.

குழையொடு     பொரும்   நெடுங்கண்  ணென்றற்கு,  “கொடுங்
குழைக்கமர்த்த   நோக்கின்”  என்றும்,  பெரியாரது  பெருந்தகைமை
அவர்  பேசும் இன்சொல்லால் விளங்குதலால், “பெருந்தகைக்கு நயவர
அமர்ந்த   மென்   சொல்”என்றும்,   மங்கல  நாணன்றிப்  பிறிதணி
பேணாமையின்   அதனை   “மாணிழை”   யென்றும்  பாராட்டினார்.
அணிகொள  என்பதைக் கதுப்பின் என்பதனோடும் இயைக்க ; இன் :
அல்வழிக்கண்     வந்த   சாரியை.    நயவர    அமர்ந்த    என
இயைத்துக்கொள்க.  நாளும்  போர் வேட்டெழும் இயல்பினனாதலின்,
“அரிவை  காணிய  ஒருநாள் பூண்க  மாள  நின்புரவி  நெடுந்தேர்”,
என்றார்.  எனவே, காமவின்பத்தினும்  போரிடை யுண்டாகும் வெற்றி
யின்பமே இச்சேரமானுக்குப் பெரிதென்றாராயிற்று.