44

களங்காய்க்கண்ணி  நார்முடிச்சேரல், காப்பியாற்றுக்காப்பியனார்க்கு
நாற்பது நூறாயிரம்  பொன்னும் தான் ஆளுவதிற்பாகமும் அளித்தான்.
இவன்   தம்பி  ஆடுகோட்பாட்டுச்  சேரலாதன்,  காக்கைபாடினியார்
நச்செள்ளையார்க்கு   அணிகலனுக்காக  ஒன்பது  துலாம்  பொன்னும்
நூறாயிரம்   பொற்காசும்  வழங்கினான்.  இவர்களுள்  பின்  னோன்,
மேல்கடற்   கரையிலிருந்த   தொண்டியைத்   தலைநகராகக்கொண்டு
அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பை ஆட்சிபுரிந்தனன் என்று தெரிகிறது.

கடல்பிறக்     கோட்டிய   செங்குட்டுவன்,   பரணர்க்குத்   தன்
ஆட்சிக்குட்பட்ட  உம்பற்காட்டு வருவாயையும் தன் மகன்  குட்டுவன்
சேரலையும்  கொடுத்தனன்.  இவன்,  தன்  புதல்வன்  அப்   புலவர்
பெருமான்பால்  கற்றுவல்லனாதலை விரும்பி அங்ஙனம்  அளித்தனன்
போலும்.

தகடூர்     எறிந்த பெருஞ்சேர  லிரும்பொறை அரிசில் கிழார்க்கு
ஒன்பது    நூறாயிரம்   பொற்காசும்,   தன்   அரசு   கட்டிலையும்
வழங்கினான்.  அப் புலவர்பிரான் அரியணையை ஏற்றுக்கொள்ளாமல்,
‘நீ  அரசு  வீற்றிருந்தாளுக’  என்று  கூறி,  இவனுக்கு அமைச்சுரிமை
பூண்டனர்.

இளஞ்சேரலிரும்பொறை  பெருங்குன்றூர்கிழார்க்கு முப்பத்தீராயிரம்
பொற்காசும், அவர் அறியாமல்  ஊரும் மனையும் வளமுற அமைத்துக்
கொடுத்தான்.  புறநானூற்றினுள்ள  210, 211- ஆம் பாடல்களை நுணுகி
ஆராயுங்கால்,   இவன்  தன்னைப்  பாடிய  பெருங்குன்றூர்கிழாரைப்
பன்னாள்   காத்திருக்கும்படி   செய்து   பின்னர்  ஒன்றுங்கெடாமல்
அனுப்பிவிட்டான்  என்பதும், அதுபற்றி அவர் மனம் வருந்திச்செல்ல
நேர்ந்தது   என்பதும்   நன்கு  வெளியாகின்றன.  இதனால்  புலவர்
பெருமானது  நல்வாழ்விற்கு வேண்டியன எல்லாம் அவருடைய ஊரில்
அவர்  அறியாமலே வைத்துவிட்டுப் பிறகு அவரை வெறுங்கையினராக
இவ்  வேந்தன்  அனுப்பியிருத்தல்வேண்டும்  என்பது  உய்த்துணரக்
கிடக்கின்றது.   இவ்வுண்மை   ஒன்பதாம்   பத்தின்   இறுதியிலுள்ள
உரைநடைப் பகுதியால் உறுதியெய்துதல் அறியத்தக்கது.

இதுகாறும்     கூறியவாற்றால்,    பதிற்றுப்பத்தின்   பாட்டுடைத்
தலைவர்களாகிய  பண்டைச்  சேரமன்னர்களின் வரையா வண்மையும்
அன்னோர்   புலவர்   பெருமக்களிடம்  காட்டிய  பேரன்பும்  நன்கு
புலனாதல் காண்க.