சிறப்பானும் இதற்கு வினை நவில் யானை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். களிறுகள் மதவெறி கொண்டு மிக்க சினத்துடன் பாகர்க்கும் அடங்காது மறலும்வழி, அம் மதம் தணிதற்பொருட்டுப் பிடியானைகளைக் கொணர்ந்து புணர்விப்பது இயல்பு. அங்ஙனம் களிறுகள் பிடிகளைப் புணர்ந்தும் மதம் தணியாது போர் வேட்டுத் திரிந்தன என்பார், “வினைநவில் யானை பிடி புணர்ந்தியல” என்றார். புணர்ந் தென்புழிச் சிறப்பும்மை தொக்கது, பிடி புணர்ந்தியல” வென்றது, அவ் வினைநவில் யானை கடாம் வார்ந்து கடுஞ் சினம் பொத்தி அச்சினத்திற் கேற்பப் போர் பெறாமையின் பாகன் அதன் சினத்தை அளவுபடுத்தற்குப் பிடியைப் புணர்க்கையான் அப் பிடியொடு புணர்ந்தும் போர்வேட்டுத் திரிய வென்றவா” றென்பது பழையவுரை. எதிர்பார்த்தவாறு போர் விரைய நிகழாமையால் வீரர் போர் வெறி கொண்டிருத்தலை, “மறவர் மறல” என்றும், போர் குறித்துக் குதிரைகள் கலனை யணிந்து செருக்கி நிற்குமியல்பை, “மாப்படை யுறுப்ப” என்றும், இவ்வாறே தேர்களும் தோற்படைகளும் போர்க்கமைந்து முறையே கொடி நுடங்க ஆரவாரித்து நிற்பதைத், “தேர் கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்ப” என்றும் கூறினார் . பழையவுரைகாரர், “மாப்படை யுறுப்ப வென்றது, இன்னபொழுது போர் நிகழுமென்று அறியாமையின் குதிரைகள் கலனை கட்டி யென்றவா” றென்றும் “தேர்கொடி நுடங்க வென்றது, தேரைப் போர்குறித்துப் பண்ணி நின்று கொடி நுடங்க வென்றவா” றென்றும், “தோல்புடை யார்ப்ப வென்றது, தோல்களும் முன் சொன்னவற்றின் புடைகளிலே போர் குறித்து நாளிடத்து ஆர்ப்ப வென்றவா” றென்றும் கூறுவர் . கூதிர்ப்பாசறையாதலின், வீரர் குளிர்காய்தற் பொருட்டுக் காட்டை வெட்டி விறகை யெரித்தல்பற்றி, “காடு கைகாய்த்திய” என்றும், ஒவ்வொரு நாளும் போர் நிகழாது நெடிது கழிதலின், “நீடுநாளிருக்கை” யென்றும், இவ்வாறே பன்னாட்கள் போரின்றியே கழிவது பற்றி, “இன்ன வைகல் பன்னாளாக” வென்றும் கூறினார். காடுகை காய்த்திய வென்றற்கு, “பாசறை யிருக்கின்ற நாள் குளிர் நாளாகையால் விறகெல்லா முறித்துத் தீக்காய்ந்த” வென்றும், இன்ன வைகலென்றற்கு, “இப் பெற்றியையுடைய பாசறை யிருக்கின்ற நாட்க” ளென்றும் வுரைகாரர் கூறுவர். யானை பிடி புணர்ந்தியல, மறவர் மறல, மா படையுறுப்ப, தேர் கொடி நுடங்க, தோல் ஆர்ப்ப என்னும் ஐந்தினையும் பன்னாளாக என்பதனோடு முடிக்க. “காட்டையென இரண்டாவது விரித்து அதனைக் காய்த்திய என்பதனுட் போந்த பொருண்மையொடு முடிக்க” என்றும், “நீடுநா ளிருக்கையையுடைய இன்ன வைகலென இரண்டாவது விரிக்க” என்றும் பழையவுரைகாரர் முடிபு கூறுவர். 11 - 16. பாடி.......................நின்னே . உரை : பாடுநர் கொளக் கொளக் குறையாச் செல்வத்து - பாடி வருவோர் நீ வரையாது வழங்குதலின் பலகாலும் கொண்ட வழியும் குறையாத செல்வத்தையும்; செற்றோர் கொலக் கொலக்குறையாத்தானை - பகைவர் பலகாலும் பொருதழித்த வழியும் குறையாத தானை வீரரையும்; |