பக்கம் எண் :

443

சான்றோர்   - அறிவாலமைந்த புலவர் ; வண்மையும்    செம்மையும்
சால்பும்  மறனும்  புகன்று  புகழ்ந்து  அசையா  நல்லிசை - கொடை
செங்கோன்மை  சால்பு  வீரம் என்ற இவற்றால் விரும்பிப் புகழ்தலால்
கெடாத  நல்ல புகழையும்; நிலம் தரு திருவின் - மாற்றார் நிலத்தைப்
போருடற்றிக்   கைக்கொள்ளுதலால்   வரும்   செல்வத்தையுமுடைய;
நெடியோய்  -  நெடிய சேரமானே ; பெரும - பெருமானே ; நின்னே
பாடிக்  காண்கு  வந்திசின் - நின்னைப் பாடிக் காண்பதற்கு வந்தேன்
எ - று.

செல்வமும்,   தானையும் மேன்மேலும் பெருகிய வண்ணமிருப்பது
தோன்ற,  “பாடுநர்  கொளக் கொளக் குறையாச் செல்வத்து” என்றும்,
“செற்றோர்  கொலக் கொலக் குறையாத் தானை” யென்றும் கூறினார் .
செல்வத்துக்குப்  பாடுநரும்  தானைக்குச்  செற்றோரும்  குறைவினை
யுண்டுபண்ணுபவாதலின்,   அவர்களை   எடுத்தோதினார்.   செல்வச்
சிறப்புக்   கூறுமாற்றால்  சேரனது  கொடைநிலையும்  விளங்குதலால்
வண்மையை   முதற்கட்   கூறினார்.   தானை   வீரரின்   தகுதியும்
வரிசையுமறிந்து  சிறப்புச் செய்து அவர் தொகையைப் பெருக்குதலால்,
“செம்மை”  தெரிவதாயிற்று.  சான்றோர்  விரும்புதற்  கேதுவாதலின்,
“சால்புமறனும்” இறுதிக்கண் வைத்துச் சிறப்பித்தார.் வண்மை முதலிய
காரணங்களைக்  காணும்  சான்றோர்  அவற்றால் அவனைப் பெரிதும்
விரும்பிப்   புகழ்வது   கூறுவார்,   “புகன்று   புகழ்ந்து”   என்றார்.
புகழ்ந்தென்னும்     வினையெச்சம்    காரணப்பொருட்டு.    இனிப்
பழையவுரைகாரர், “புகன்ற புகழ்ந்தென்பதனைப் புகன்று புகழ வெனத்
திரிக்க”    என்றும்,   “புகழ்க்   காரணமாகிய   வண்மை   முதலிய
குணங்களைச் சான்றோர் புகன்று புகழ்கையாலே கெடாது நின்ற நல்ல
புகழெனக் கொள்க” என்றும் கூறுவர்.

மாற்றார்   நிலத்தை வென்று கைக்கொள்ளுமி்டத்து, அவர் திறைப்
பொருள் பெருகத் தந்து பணிதலால், அச்செல்வத்தை “நிலந்தரு திரு”
என்றார்.  நிலத்திடத்தே  விளைத்துக்கொள்ளும் பெருஞ் செல்வத்தை
“நிலந் தருதிரு” என்றா ரென்றுமாம்.

“செற்றார்   கொலக் கொலக் குறையாத் தானை யென்றது, பகைவர்
போருட்   கொல்லக்  கொல்லக்  குறைபடாத  தானையென்று  அதன்
பெருமை கூறியவா” றென்பர் பழையவுரைகாரர், பெருமை, மிகுதி.

இதுகாறும் கூறியது, நெடியோய், பெரும, கட்டூரிடத்தே யானை பிடி
புணர்ந்தியல,  மறவர்  மறல,  மா படை யுறுப்ப, தேர் கொடி நுடங்க,
தோல்   புடை   யார்ப்ப,   நீடுநா   ளிருக்கையையுடைய   வைகல்
பன்னாளாதலால்,   நின்னைப்  பாடிக்காண்கு  வந்திசின்  என்பதாம்.
பழையவுரைகாரர்,   “நெடியோய்,   பெரும,   கட்டூரிடத்தே   நீடுநா
ளிருக்கை  இன்ன  வைகல்தான்  பன்னா ளான படியானே நின்னைப்
பாடிக் காண்கு வந்தேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர்.

“இதனாற்  சொல்லியது     :    அவன்   வென்றிச்    சிறப்புக்
கூறியவாறாயிற்று.”