முதலில் அமைந்துள்ள தொடர்களையே பெயர்களாக வழங்கியுள்ளமையால் தெரிகின்றது. பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து எட்டாம் பத்துக்களின் பதிகங்களில் ‘வேளாவிக்கோமான் பதுமன் தேவி’ என்றும், ஆறாம் பதிகத்தில் ‘வேளாவிக்கோமான் தேவி’ என்றும் பயின்றுவரும் தொடர்கள் வேளாவிக்கோமான் பதுமன் என்பவனுடைய மகள் எனவே பொருள்படும் என்பது ஈண்டறியத்தக்க தொன்றாகும். சோழ மன்னர்களின் மனைவியருள், பாண்டியன் மகள் தென்னவன் மாதேவி பஞ்சவன் மாதேவி எனவும், சேரன் மகள் சேரன் மாதேவி மானவன் மாதேவி எனவும் வழங்கப்பெற்றனர் என்பது சோழ மன்னர் கல்வெட்டுக்களால் நன்குணரப்படும். தேவி என்னும் சொல் மனைவியென்ற சிறப்புடைப் பொருளில் வழங்குவதாயினும் இடைக்காலத்தில் அச்சொல் மகள் என்ற பொருளிலும் பெருக வழங்கினமை மேற்காட்டிய பதிற்றுப்பத்துப் பதிகங்களின் தொடராலும் சோழ மன்னர் கல்வெட்டுக்களாலும் இனிது புலனாம். இதுகாறும் கூறியவாற்றால் பதிற்றுப்பத்தின் பதிகங்கள் நம் தமிழகத்தின் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவனவாகும் என்பதும், அப் பதிகங்களே சோழ மன்னர்கள் தம் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்திகள் வரைதற்கு ஓர் ஏதுவாக இருந்திருத்தல் கூடும் என்பதும், சேரமன்னர்கள் தம்மைப் பாடிய புலவர் பெருமக்களைப் பாராட்டிப் போற்றிய முறைகள் இவை என்பதும், பதிகங்களில் காணப்படுவன உண்மைச் செய்திகளேயாம் என்பதும் அவற்றை உறுதிப்படுத்தற்குரிய சான்றுகள் கல்வெட்டுக்கள் செப்பேடுகள் முதலானவற்றில் இக்காலத்தும் உள்ளன என்பதும் நன்கு விளங்குதல் காண்க. |