1 - 15. வையகம்................குரிசில். உரை : கடவுட் பெயரிய கானமொடு கல் உயர்ந்து - விந்தையென்னும் பெயரையுடைய கொற்றவையின் பெயராலாகிய விந்தாடவியோடு அப்பெயரையே யுடையதாகிய விந்தமலையினும் புகழ் மிகுந்து ; தெண்கடல் வளைஇய மலர் தலையுலகத்து - தெளிந்த கடலாற் சூழப்பட்ட அகன்ற இடத்தையுடைய நிலவுலகத்தில் ; வையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாது - நாடு வளம் சிறத்தற் கேதுவாகிய அரசர்க்குரிய தொழில்முறை வழுவாதொழுகி ; தம்பெயர் போகிய ஒன்னார் தேய - தங்கள் சீர்த்தியை நாற்றிசையும் பரப்பிய பகைவராகிய கடம்பர்கள் குன்ற ; துளங்கு இருங்குட்டம் தொலைய - அலையெழுந்தசையும் கரிய கடலிடத்தே அவர்கள் தோற் றழியுமாறு ; வேலிட்டு - வேற்படையைச் செலுத்தி வென்று ; அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்தும் - அவர்கள் தமக்குக் காவல்மரமாகப் பேணிக்காத்த தெய்வத்தன்மை பொருந்திய கடம்புமரத்தை வேரோடு தகர்த்தழித்தும் ; பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று - காமூரென்னும் ஊரிடத்தே யிருந்து கொண்டு சேரருடன் போருடற்றக் கூடிய மாறுபாட்டினைப் பெற்ற கழுவுள் என்பானைத் தோல்வி யெய்துவித்து ; நாம மன்னர் துணிய நூறி - அவற்குத் துணையாய்ப் போந்த அச்சம் பொருந்திய மன்னர் துண்டுதுண்டாய் வெட்டுண்டு வீழக்கொன்று ; கால் வல் புரவி அண்டர் ஓட்டி - காலால் வலியவாகிய குதிரைகளையுடைய இடையர்களைத் துரத்தி்யும் ; சுடர் வீ வாகை நன்னற் றேய்த்து ஒளிர்கின்ற பூக்களையுடைய வாகைமரத்தைக் காவல்மரமாகக் கொண்டோம்பிய நன்னன் என்பானை அவ்வாகை மரத்தோடும் அழித்தும் ; குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு - பகைவரது குருதி தெளித்துப் பிசைந்த திரண்ட சோற்றுக்குவியலாகிய குன்றைக்கொண்டு ; உருகெழு மரபின் அயிரை பரைஇ - உட்குதலைப் பயக்கும் முறைமையினையுடைய அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் பரவி ; வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய - முடியரசராகிய சோழ பாண்டியரும் குறுநில மன்னரும் வணங்கி வழிபட்டு நிற்கவும் ; கொற்ற மெய்திய பெரியோர் மருக - வெற்றியெய்திய பெரு மக்களின் வழி வந்தோனே ; வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் - அகன்ற பிடரியினையுடைய சிங்கத்தினது வலிபொருந்திய தலைவனே எ - று. வடநாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியில் வைத்துச் சான்றோரால் புகழப்படும் பெருஞ் சீர்த்தியுடையதாகலின், சேரர் புகழ்க்கு உவமையாக விந்தமலையையும் அதனைச் சூழவுள்ள கானத்தையும் எடுத்தோதினார். கல்லுயர்ந்து என்புழி உறழ்ச்சிப் பொருட்டாய ஐந்தாவது தொக்கது |