சேரலைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் “பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன், சுடர்வீ வாகைக் கடி முதல் தடிந்த, தார்மிகு மைந்தி னார்முடிச் சேரல்” (பதிற். 40) என்று கூறுதல் காண்க . அயிரை யென்றது, அயிரை மலையிலுள்ள கொற்றவையை .இக் கொற்றவையைச் சேரர் வீரரது விழுப்புண்ணிற் சொரியும் குருதி கலந்த சோற்றுத் திரளைப் படைத்து வழிபடுவது மரபாதலின், “குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோ, டுருகெழு மரபி னயிரை பரைஇ” என்றார் . பிறரும் அயிரைக் கடவுளை, “நிறம்படு குருதி புறம்படி னல்லது, மடையெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற், கடவுளயிரை” (பதிற். 79) என்று கூறுதல் காண்க. பல்யானைச் செல்கெழு குட்டுவன் அயிரைக் கடவுளைப் பரவிய செய்தியை “இருகடல் நீரு மொருபக லாடி, அயிரை பரைஇ” யென்று மூன்றாம் பத்தின் பதிகம் கூறுகிறது. பிறாண்டும் இப்பாட்டினாசிரியர், “உருகெழு மரபின் அயிரை பரவியும்” (பதிற். 90) என்று இச்செய்தியைக் குறிக்கின்றார். இளஞ்சேர லிரும்பொறையின் முன்னோர் செய்த செயலெல்லாம் குறித்துரைத்துப் பாராட்டுகின்றா ராதலின் “பெரியோர்” என அவர் தம் பெருமையைப் புலப்படுத்தார். இ்க்கூறிய செயல்களால் ஏனை வேந்தரும் வேளிரும் தலைதாழ்த்துப் பணிபுரிவது தோன்ற, “வேந்தரும் வேளிரும் முன்வந்து பணியக் கொற்ற மெய்திய பெரியோர் மருக” என்றார். இதுகாறும் கூறியதனால், உலகத்து ஒன்னார் தேய, வேலிட்டும், முழுமுதல் தடிந்தும், புறம் பெற்றும், தேய்த்தும், அயிரை பரைஇயும் கொற்ற மெய்திய பெரியோர் மருக என்று கூறி, இளஞ்சேர லிரும்பொறையின் தனியாற்றலை விளங்குதற்கு “வியலுளை யரிமான் மறங்கெழு குரிசில்” என்றார். இனிப் பழைய வுரைகாரர், “வையக மலர்ந்த தொழிலென்றது, வையகத்திற் பரந்த அரசர் தொழிலென்றவா” றென்றும், “கடவுட் பெயரிய கானமென்றது, விந்தாடவியை” யென்றும், “கடவுளென்றது, ஆண்டுறையும் கொற்றவையினை” யென்றும், “கடவுளினென விரிக்க” என்றும், “கல்லுயர வெனத் திரிக்க” வென்றும், “அயிரை யென்றது அயிரை மலையுறையும் கொற்றவையினை” யென்றும் கூறுவர். 16 - 21. விரவுப் பணை.....................பொருந. உரை : விரவுப் பணை முழங்கும் - பலவகை இசைக் கருவிகளுடன் கலந்து முரசுகள் முழங்குகின்ற ; நிரை தோல் வரைப்பின் - வரிசையாகக் கிடுகுகள் பரப்பிய இ்டத்தினையுடைய; உரவுக்களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை - உலாவுகின்ற களிறுகளின் மேல்நின்ற வெற்றிக்கொடிகள் அசையும் பாசறையி்ல்; ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை - பகைவருடைய அரிய மதில்களைச் சீர்குலைத்த கற்களை யெறியும் கவணைப் பொறியையும் ; நார் அரி நறவின் - நாரால் வடிக்கப்பட்ட கள்ளையுமுடைய; கொங்கர் கோவே-கொங்கு நாட்டவர்க்குத் தலைவனே; |