உடலுநர் தபுத்த பொலம் தேர்க்குருசில் - மாறுபட்டுப் பொருதவரையழித்த பொன்னானியன்ற தேரையுடைய குரிசிலே ; வளை கடல் முழவின் தொண்டியோர் பொருந - சங்குகளையுடைய கடல் முழக்கத்தை முழவு முழக்காகக் கொண்ட தொண்டி நகரிலுள்ளார்க்குத் தலைவனே எ - று. விரவுப்பணை முழங்கும் பாசறை, வரைப்பின் பாசறை, வெல்கொடி நுடங்கும் பாசறையென இயையும், பலவகை வாச்சியங்களின் தொகுதியை யுணர்த்தற்கு “விரவுப்பணை” யென்றும், பாசறையின் எல்லையிடத்தே வில்லும் கேடகமும் வேலியாக நிரை நிரையாக நிறுத்தப்படுவதுதோன்ற, “நிரை தோல் வரைப்பிற் பாசறை” யென்றும், யானை மேற் கொடி நிறுத்தல் பண்டையோர் மரபாதலின், அசைநடை கொண்டு உலாவும் யானை நிரையையுடைய பாசறையை, “உரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை” யென்றும் கூறினார் . பகைவர் தம் அரண்களைப் பெரிய கற்குண்டுகளை யெறிந்து தாக்குதற்குக் கல் கால் கவணைகள் பல பாசறையிடத்தே அமைக்கப்பட்டிருப்பது காண்க. மதிலிடத்தே யமைக்கப்பெறும் பல்வகைப் பொறிகளோடு, படைகொண்டு செல்லுமிடத்து உடன்கொண்டு போகப்படும் பொறிகளும் இருந்தன என்பதும், அவற்றுள் கல் கால் கவணை சிறப்புடைத்தாதல் பற்றி, அதனை எடுத்தோதினா ரென்பதும் இதனால் அறியலாம். பண்டைக் கிரேக்கரும் உரோமரும் கொண்டு பொருத கல் கால் கவணை பண்டைச் சேரரிடத்தும் இருந்தமை இதனால் விளங்கும். பெருங்கற்களை வைத்து நெடுந் தொலையில் மிக விரைய எறிந்து பகைவர் அரண்களைச் சீரழித்து வலியழிக்கும் இயல்புபற்றியும், மக்களால் எறியப்படும் கவண் போலாது பொறிதானே பெருங்கற்களை வீசி யெறிவது பற்றியும் “கல் கால் கவணை” யென்றார். இச்சிறப்பால் இஃது இப்பாட்டிற்கும் பெயராயிற்று. இன்னோரன்ன பொறிகளின் அமைப்பு, வடிவு முதலியவற்றைப் பற்றிய எழுத்தோ ஓவியமோ கிடைக்காமையால் வேறொன்றும் இதனைப்பற்றிக் கூறற்கில்லை. பழையவுரைகாரர், “கல் கால் கவணை யென்றது கற்களைக் கான்றாற்போல இடையறாமல் விடும் கவணென்றவா” றென்றும், இச் சிறப்பானே இதற்குக் “கல் கால் கவணையென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். கவணைப் பொறிகொண்டு பகைவரை யெறியும் கொங்கர்ப்படையினர், போர்வெறி மிகுதற் பொருட்டுக் கள்ளுண்டல் தோன்ற, “நாரரி நறவிற் கொங்கர்” என்றார். உடலுநர்த் தபுத்த குருசில், பொலந் தேர்க் குருசில் என்க. தொண்டி - மேலைக் கடற்கரையிலுள்ளதும் சேரர்க் குரியதுமாகிய பேரூர். அங்கே சங்கு மேயும் கடலின் முழக்கம் மிக்கிருத்தல் பற்றி, “வளைகடல் முழவிற் றொண்டியோர் பொருந” என்றார். பொருந என்பது, போர்வீரனே என்னும் பொருட்டு. 21 - 38. நீ நீடுவாழி......................பன்னாள். உரை : துவைத்த தும்பை நனவுற்று வினவும் மாற்றரும் தெய்வத்துக் கூட்டம் முன்னிய - பல வாச்சியங்கள் முழங்குகின்ற தும்பைசூ டிச் செய்யும் போரின்கண் மெய்ம்மையாக வெற்றியுண்டாதல் |