பக்கம் எண் :

466

வேண்டிப்     பரவப்படும்   மாற்றுதற்கரிய தெய்வமாகிய கொற்றவை
கூடியிருக்கும்  மலையாகிய  அயிரையிடத்தே தோன்றிய ; புனல் மலி
பேர்  யாறு இழிதந்  தாங்கு - நீர் நிறைந்த பெரிய யாறானது இறங்கி
வந்தாற்போல  ; நின் வயின் வருநர் வரையா நின்னை நோக்கி வரும்
இரவலர்க்கு வரையாது வழங்கும் ; செழும்பல் தாரம் கொளக் கொளக்
குறையாது   தலைத்தலைச்   சிறப்ப  -  செழுமையாய்ப்  பலவாகிய
பொருள்கள்  அவ்  விரவலர்  கொள்ளக்  கொள்ளக் குறைவுபடாமல்
மிக்கு   விளங்க   ;  ஓவத்தன்ன  உருகெழு  நெடுநகர்  -  ஓவியத்
தெழுதினாற்  போன்ற உருவமைந்த நெடிய அரண்மனைக் கண்ணே ;
பாவையன்ன  மகளிர் நாப்பண் - கொல்லிப் பாவை போலும் உரிமை
மகளிரின்  நடுவே  ;  மாகம்  சுடர  மா  விசும்பு  உகக்கும் - திசை
யெல்லாம்  ஒளி  விளங்கக்  கரிய  வானத்தே  உயர்ந்து  செல்லும் ;
ஞாயிறு  போல  - சூரியன் போல ; பன்னாள் விளங்குதி - பலகாலம்
விளங்கி  வாழ்வாயாக  ;  புகன்ற மாண்பொறி - ஆடவர்க்குச் சீர்த்த
இலக்கணமாக   நூல்களிற்   கூறப்பட்ட   மாட்சிமைப்பட்ட  வரிகள்
பொருந்திய   ;   பொலிந்த  சாந்தமொடு  -  பூசப்பட்டு  விளங்கும்
சந்தனத்தோடு  ;  தண்  கமழ்  கோதை  சூடி - தண்ணிதாய் மணங்
கமழும்  முத்துமாலையை  யணிந்து  ;  பூண்  சுமந்து - தோள்வளை
முதலிய  பேரணிகளை  யணிந்து ; திரு வில் குலைஇ - வானவில்லை
வளைத்து ; திருமணி புரையும் உருகெழு கருவிய பெருமழை  சேர்ந்து
-   மாணிக்க  மணிபோலச்  செந்நிறங்  கொண்டு  திகழும் மின்னல்
முதலியவற்றின்  தொகுதியவாகிய  பெருமுகில் சேர்தலால் ; வேங்கை
விரிந்து  -  வேங்கை  மலர்ந்து  ;  விசும் புறு சேண் சிமை அருவி
அருவரையன்ன  மார்பின்  -  வானளாவி மிக வுயர்ந்த சிகரத்தையும்
அருவிகளையுமுடைய  அரிய  மலைபோன்ற மார்பினையுடையனாய் ;
நல்லிசை  சேணாறும்  சேயிழை  கணவ - கற்புடைமையாலுண்டாகிய
நல்ல   புகழானது   நெடுந்   தொலைவு  சென்று  பரவிய செவ்விய
இழையணிந்தாட்குக்  கணவனானவனே  ; பெரும - பெருமானே ; நீ
நீடுவாழி - நீ நெடிது வாழ்வாயாக எ - று.
  

தெய்வம்     கூடியிருக்கும்    இடமாகிய   அயிரை  மலையைத்
“தெய்வத்துக்     கூட்டம்”    என்றார்.    கூடுதற்கமைந்த   இடம்
கூட்டமென்றது   ஆகுபெயர்.   தெய்வம்,   கொற்றவை.  போர்க்குச்
செல்லும்போது   போரிலே  வெற்றியுண்டாதல்  வேண்டிச்  சேரர்கள்
அயிரை மலைக் கொற்றவையைப் பரவுவது பற்றி, “நனவுற்று வினவும்”
என்றும்,  தும்பைப்  போரில்  பலவகை  வாச்சியங்கள் முழங்குதலின்
“துவைத்த தும்பை” யென்றும் கூறினார். தும்பைப் போரில் விளையும்
வெற்றியாகிய  பயன்  குறித்தலின்,  தும்பை ஆகுபெயர். குருதியொடு
விரவியதல்லது  பிறவகையால் தரப்படும் மடையினை யெதிர்கொள்ளா
மரபிற்றாதலின்,    “மாற்றருந்தெய்வம்”    என்றார்    ;   எனவே,
இவ்வகையானன்றி     வேறு     வகையால்     மாற்றற்கில்லாத
சினத்தையுடையள் என்பது கருத்தாயிற்று.