கூடியுறைதலையுடைய அயிரை தெய்வத்துக் கூட்டமெனப்பட்ட” தென்றும், “இழிந்தாங்கென்றது அவ் யாறு மலையி்னின்று இழிந்தாற்போல” என்றும், “பொறி யென்றது உத்தம விலக்கணங்களை” யென்றும், “பொறியொடு சாந்தமொடுவென ஒடுவை யிரண்டற்கும் கூட்டியுரைக்க” வென்றும், “ஒடு வேறுவினையொடு” என்றும், “கோதையென்றது முத்தாரத்தினை” யென்றும், “சூடிச் சுமந்தென்னும் வினையெச்சங்களை வரையன்ன வென்பதனுள் அன்ன வென்பதனோடு முடிக்க” என்றும் கூறி, இப் பகுதிக்கு வினைமுடிபு காட்டலுற்று, “விற்குலைஇ வேங்கை விரிந்து என்னும் வினையெச்சங்களைத் திரித்து வில் குலவ வேங்கை விரியத் திருமணி புரையும் உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து விசும்புறு சேட்சிமை அருவியருவரை என மாறிக் கூட்டி, இதனைக் குறைவுநிலை யுவமையில் வழுவமைதியாக்கிப் பொறிக்கு வேங்கைப்பூ உவமமாகவும், கோதைக்குத் திருவில் உவமமாகவும் பூணிற்கு அருவி யுவமமாகவும் சாந்திற்கு உவமமில்லையாகவும் உரைக்க” என்றும், “இவ்வாறு இடர்ப்படாது மலையை யுரைப்பினு மமையு” மென்றும் கூறுவர் . மாகம், திசை, இனி, நிலத்துக்கும் விசும்புக்கும் இடையிலுள்ள வெளியிடமென்றுமாம். “உகப்பே யுயர்தல்” (தொல். உரி. 9) என்பவாகலின், நண்பகலில் நெடுந்தொலையில் விசும்பி லுயர்ந்து விளங்குதல் பற்றி, “மாவிசும் புகக்கும்” என்றார் . “வருநர் வரையாச் செழும்பல் தாரம் தலைத்தலைச் சிறப்ப, “நெடுநகரிடத்தே பாவை போலும் உரிமை மகளிரிடையே நெருஞ்சியை மலர்க்கும் ஞாயிறுபோல அவர் மனமும் முகமும் காதலன்பால் மலரநின்று விளங்குமாறு விளங்குக என்பார், குறிப்பால், “ஞாயிறுபோல விளங்குதி” யென்றார். சேரனை ஞாயிறென்றாற் போல மகளிரை நெருஞ்சிப்பூ வென்னாமையின் இஃது ஏக தேச வுருவகம். நெருஞ்சி ஞாயிற்றை நோக்கி மலர்ந்திருப்பது போல, இம்மகளிரும் இவனை நோக்கி மலர்ந்திருப்ப ரென்பது. “நீ நீடுவாழிய பெரும” என வாழ்த்துதலின், நெடிது வாழும் வாழ்நாட்கள் பலவினும் ஞாயிறுபோல விளங்குக என்பார், “ஞாயிறுபோல விளங்குதி பன்னாள்” என்றார் . “விளங்குதி யென்பது ஈண்டு முன்னிலை யேவ” லெனப் பழையவுரை கூறுகிறது. 39 - 42. ஈங்கு.........................கிழவோயே . உரை : உறு கால் எடுத்த ஓங்குவரற் புணரி - மிக்க காற்றால் எழுப்பப்பட்ட வுயர்ந்து வரும் அலைகள்; நுண்மணல் அடைகரை யுடைதரும் - நுண்ணிய மணல் பரந்த கரையினை யலைக்கும் ; தண்கடற் படப்பை நாடுகிழவோய் - குளிர்ந்த கடற் பக்கத்தையுடைய நாட்டுக் குரியோனே ; ஈங்கு யான் காண்கு வந்திசின் இவ்விடத்தே யான் நின்னைக் கண்டு நின் புகழ் பரவுவதற்கு வந்தேன் , வறுமையுற்று நின்பால் ஒன்றை இரத்தற்கு வந்தேனில்லை எ - று. பெரியோர் மருக, மறங்கெழு குருசில், கொங்கர் கோவே, பொலந்தேர்க் குருசில், தொண்டியோர் பொருந, பெரும, சேயிழை கணவ, நாடு கிழவோய், நீ |