பக்கம் எண் :

469

நீடுவாழிய,     வாழும்  நாள் பலவும், நின்பால், வருநர்   வரையாச்
செழும்பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத் தலைச்  சிறப்ப,
நெடுநகர்க்கண்   பாவையன்ன   மகளிர்  நாப்பண்,  ஞாயிறு  போல
விளங்குதி  யென்று  கூறவே,  “செழும்பல்  தாரம்  கொளக் கொளக்
குறையாது    தலைத்தலைச்    சிறப்ப”    என்ற    குறிப்பேதுவாக,
இளம்பொறை,         ஆசிரியர்க்கு      மிக்க        பொருளை
வழங்கச்சமைந்தானாதலின்,  அக்குறிப்பறிந்  துரைப்பாராய்,  “ஈங்குக்
காண்கு வந்தனென் யான்” என்றார்.
  

“ஓங்குவரற் புணரி” யென்றலின், அதற்கேதுவாக,“உறுகால் எடுத்த”
என்றும்,   அவ்வுயரிய  அலைகளைத்  தடுத்தற்குரிய  கல்  நிறைந்த
கரையில்லையென்றதற்கு, “நுண் மணலடை கரை” யென்றும், அதனால்
கரை   முற்றும்   தெங்கும்  கமுகும்  வாழையும்  சிறந்து  படப்பை
போறலின், “தண்கடற் படப்பை நாடு” என்றும் சிறப்பித்தார். படப்பை,
வளவிய தோட்டம்.
  

செழும்பல் தாரம் வருநர் வரைவின்றிப் பெறத் தருதலால் குன்றாத
செல்வம்  இடந்தொறும்  மிக்குறுக என்பார், “தலைத் தலைச் சிறப்ப”
என்றாராகலின்,  அதற்குரிய  ஏதுவினை,  உள்ளுறுத் துரைத்திருப்பது
மிக்க   இன்பம்   பயக்கின்றது.   உறுகாலெடுத்த  ஓங்குவரற் புணரி
யென்றதனால்,  பகைவரது  பகைமைச்  செயல்  மிகுதலால் வீரத்தால்
வீறு  கொண்டு  செல்லும்  நின் தானை யென்றும், அவ்வலைகளைத்
தடுக்க இயலாத நுண்மணலடைகரை யுடைவதுபோல, நின் தானையை
யெதிரேற்றுப் பொரும்வலியில்லாத மெலியோர் திரண்ட பகைவர்திரள்
தோற்றோடும் என்றும் உள்ளுறுத் துரைத்திருத்தலை நுண்ணுணர்வாற்
கண்டுகொள்க.
  

இதுகாறுங்     கூறியவாற்றால், மலர்தலை யுலகத்து ஒன்னாராகிய
கடம்பர்  தேய  வேலிட்டும்,  கடம்பின் முழுமுதல் தடிந்தும், கழுவுள்
புறம்  பெற்றும்,  அண்டரோட்டி நன்னற் றேய்த்தும், குருதி விதிர்த்த
குவவுச் சோற்றுக் குன்றோடு அயிரை பரவியும், வேந்தரும் வேளிரும்
பணியக்  கொற்ற  மெய்தியும்  சிறந்த  பெரியோர்  மருக, மறங்கெழு
குருசில்,  பாசறையிடத்துக்  கல்  கால் கவணையும், நறவையு முடைய
கொங்கர்  கோவே,  பொலந்தேர்க் குருசில்,  தொண்டியோர் பொருந,
பெரும,  நீ  நீடு வாழ்வாயாக  ;  மாண் பொறியோடு சாந்த மணிந்து
கோதை  சூடிப்  பூண்  சுமந்து  அருவி  யருவரை யன்ன மார்பினை
யுடையையாய்,   நல்லிசைச்  சேயிழை  கணவனாகியோனே,  வருநர்
வரையாச்    செழும்பல்    தாரம்   கொளக்   கொளக்  குறையாது
தலைத்தலைச்  சிறப்ப,  உருகெழு  நெடுநகர்க்கண்  மகளிர் நாப்பண்,
மாகம்  சுடர  மாவிசும்புகக்கும் ஞாயிறுபோலப் பன்னாள் விளங்குதி ;
தண்கடற் படப்பை நாடு கிழவோய், ஈங்கு பான் காண்கு வந்தனென் ;
வேறே  இன்மை துரப்ப இரத்தற்கு வந்தேனில்லை என்பதாம்.  இனிப்
பழையவுரைகாரரும்,  “பெரியோர் மருக, மறங்கெழு குருசில், கொங்கர்
கோவே,   பொலந்தேர்க்குருசில்,   தொண்டியோர்  பொருந, பெரும,
சேயிழை கணவ, நாடு கிழவோய், ஈங்கு நிற்காண்கு வந்தேன் ; நீ நீடு
வாழ்வாயாக  ; பலதாரம் கொளக் கொளக் குறையாமற் சிறப்ப மகளிர்
நாப்பண்  பன்னாள்  ஞாயிறுபோல  விளங்குவாய் என மாறிக் கூட்டி
வினை முடிவு செய்க” என்பர்.