தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர் : வலிகெழு தடக்கை. 1 - 13. மீன் வயின்......................மருக. உரை : மீன் வயின் நிற்ப - விண்மீன்களும் கோள்களும் தத்தமக்குரிய இடத்தே நிற்க; வானம் வாய்ப்ப - மழை தப்பாது பொழிய ; அச்சு அற்று ஏமமாகித் தோன்றி - உயிர்கட்குத் தாம் அச்சமின்றிப் பாதுகாப்பதாய்த் தோன்றி; இருள் தீர்ந்து இன்பம் பெருக துன்பமின்றி இன்பம் நாளும் மிகுமாறு ; தம் துணைத் துறையின் எஞ்சாமை நிறையக் கற்று - தமக்குரிய அளவாக வகுக்கப்பட்ட கல்வித் துறையின் கண் கற்பன குறைவுபடாது நிரம்பக் கற்று ; கழிந்தோர் உடற்றும் கடுந்தூ அஞ்சா - வலி மிக்கோர் செய்யும் போர்க் கேதுவாகிய மிக்க வன்மைக்கு அஞ்சுதலில்லாத ; ஒளிறு வாள் வய வேந்தர் - விளங்குகின்ற வாளையுடைய வலிய அரசர் ; களிறொடு கலம் தந்து - யானைகளோடு கலன்கள் பலவும் செலுத்தி; தொன்று மொழிந்து தொழில் கேட்ப - தமது பழைமையைச் சொல்லிப் பணி யேற்று நடப்ப ; அகல் வையத்துப் பகலாற்றி - அகன்ற உலகத்திலே நடுவு நிலைமையைப் புரிந்து ; மாயாப் புகழ் வியல் விசும்பு ஊர்தர - அழியாத பல்லாற்றாற் பெருகிய புகழ் அகன்ற வானமெங்கும் பரவ; வாள் வலியுறுத்து தமது வாள் வன்மையைத் தெரியாத பகைவர் தெரிய வற்புறுத்தி ; செம்மை பூஉண்டு அறன் வாழ்த்த - செங்கோன்மை மேற் கொண்டதனால் அறவோர் மகிழ்ந்து வாழ்த்த ; நற்காண்ட விறல் மாந்தரன் - நன்றாக ஆட்சி புரிந்த விறலையுடைய மாந்தர னென்னும் சேரமானது ; விறல் மருக - மேம்பட்ட வழித்தோன்றலே ; நாளுங் கோளும் நிலைதிரியின் நாட்டில் மழை யின்மை, வறுமை, நோய் முதலிய துன்ப முண்டா மாதலின், “மீன்வயின் நிற்ப” என்றும், நிற்றலாற் பயன் மழை யுண்மையும் அச்சமின்மையும் துன்பமின்மையும் இன்பமும் பெருகுதலாதலால், “வானம் வாய்ப்ப” என்றும் “அச்சற்று ஏமமாகி” யென்றும், “இருள் தீர்ந்து இன்பம் பெருக” என்றும் கூறினார். “வியனாண்மீ னெறி யொழுக” (மதுரைக். 6) என்று மாங்குடி மருதனார் கூறுதல் காண்க. அச்சம், அச்செனக் கடைக்குறைந்து நின்றது; “அச்சாறாக வுணரிய வருபவன்” (கலி .75) என்றாற்போல அச்சமின்றிப் பாதுகாவலாக விளங்குதலை, “அச்சமறியா தேமமாகிய” (மதுரைக். 652) என்று சான்றோர் விளக்குத லறிக. இருள், அறியாமை காரணமாக வரும் துன்பம். கற்றற்குரியவற்றை எஞ்சாமை நிறையக் கற்பதன் பயன் இருள் நீங்கலும் இன்பம் பெறுதலுமாதலின், “இருள்தீர்ந் தின்பம் பெருக” என்றார் “இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி, மாசறு காட்சி யவர்க்கு” (குறள். 352) என்று சான்றோர் கூறுப. “ஐவகை மரபி னரசர் பக்கமும்” (தொல். புறத். 20) என அரசர்க்கு வகுத்துள்ள |