பக்கம் எண் :

478

கல்வி     முறையை, “தந்துணைத்   துறையின்” என்றும், அவற்றைக்
கடைபோகக்  கசடறக்  கற்றது  தோன்ற, “எஞ்சாமை நிறையக் கற்று”
என்றும்  கூறினார். ஏமமாகித் தோன்றி இருள் தீர்ந்து இன்பம் பெருக
என   இயைக்க.   இனித்   “தந்துணைத்துறை  யென்றது  பார்ப்பார்
முதலாயினார்   தத்தமக்   களவான   துறை  நூல்களை”  யென்றும்,
கற்றென்பதைக் கற்கவெனத் திரிக்க வென்றும் பழையவுரை கூறுகிறது.
  

கழிந்தோர்,  பல போர்களைச் செய்து வெற்றியுற்று நிற்கும் வீரர் ;
இந்நிலை  மிக்க வலியுடையோர்க் கல்லது கூடாமையின், “கழிந்தோர்”
என்றும்,  பல  போரினும்  பயின்று  மேம்பட்ட  வலி  யென்றறற்குக்
“கடுந்தூ” என்றும் கூறினார்.
  

பணிந்தொழுகும்   சிற்றரசர் வலி கூறவே, பேரரசனாகிய சேரனது
பெருவலி  தானே  விளங்குமாதலின்,  “தொன்று  மொழிந்து தொழில்
கேட்கும்  வய” வேந்தரை, “கடுந்தூ வஞ்சா ஒளிறு வாள் வயவேந்த”
ரெனச்  சிறப்பித்தார். தொன்று  மொழிதலாவது,  வழி வழியாக யாம்
பேரரசனாகிய நினக்குத் திறை செலுத்திப் பணி புரிகின்றே மென்பது.
  

அகன்ற  வுலகின்கண் புகழ்பெறுதற்குரிய வாயில்கள் பலவற்றினும்
நடுவு  நிலைமை  புரிதலாற் பெறப்படும் புகழ் தலைமை யுடைத்தாதல்
பற்றி, “அகல் வையத்துப் பகலாற்றி மாயாப் பல்புகழ்” என்றும்,  புகழ்,
நிலவுலகை  ஆதாரமாகக் கொண்டு அகல்வான மெங்கும் பரவி நிற்ப
தாகலின், “புகழ் வியல் விசும்பூர்தர” என்றும் கூறினார் . நடுவு நிலை,
நுகத்துப்  பகலாணி  போறலின், பகலெனப் பட்டது ; “நெடு நுகத்துப்
பகல்போல, நடுவுநின்ற நன்னெஞ்சினோர்” (பட்டி 206-7) என வருதல்
காண்க.
  

தமது     வாள்வன்மையைப்  பகைவர்  போர்முகத்தே  பொருது
கண்டஞ்சச்   செய்தமை   தோன்ற,  “வாள்வலி  யுறுத்து”  என்றும்,
தெவ்வரும் வாள்வன்மை தேர்ந்து பணிந்து போந்த காலை அவர்பால்
அருள்   செய்து  நீதி  வழங்குதலால்  ‘செம்மை  பூண்டு’  என்றும்,
இருதிறத்து  நலந்  தீங்குகளையும் உள்ளவா றுணர்ந்து அறிவுறுத்தும்
சான்றோர்  அறவோராதலின்,  வேந்தன்  செற்றவர்  நட்டவர்  என்ற
இருவர்பாலும்  செம்மைபூண்  டொழுகுதலால்,  மிக்க  மகிழ்ச்சியுற்று
வாழ்த்துமாறு  தோன்ற,  “அறன்  வாழ்த்த”  என்றும்,  “நற்காண்ட”
என்றும் கூறினார். விறல், மேம்பாடு ; வெற்றியுமாம்.
  

ஏமமாகித்     தோன்றி, நிறையக் கற்று, வேந்தர் தொழில் கேட்ப,
பகலாற்றி,  புகழ்  விசும்பூர்தர,  வாள்வலி  யுறுத்துச் செம்மை பூண்டு
நற்காண்ட  மாந்தரன்  மருக  என்றியைக்க;  இனி,  இன்பம்  பெருக
ஏமமாகித்  தோன்றி,  வேந்தர் தொழில் கேட்ப வையத்துப் பகலாற்றி,
புகழ்  விசும்பூர்தர  வாள்  வலியுறுத்து,  அறன்  வாழ்த்தச் செம்மை
பூண்டு  நற்காண்ட  மாந்தரன் மருக என்றியைப்பினுமமையும், இனிப்
பழைய   வுரைகாரர்,   “தந்தென்றது  இடவழு  வமைதி” யென்றும்,
“வையத்துப்     பகலாற்றி     யென்றது,      வையத்தார்கண்ணே
நடுவுநிலைமையைச்   செய்தென்றவா”   றென்றும்,  “செம்மை  பூண்
டென்றது,    செவ்வையைத்    தான்   பூண்டென்றவா”   றென்றும்,
“அறனென்றது,  அறக்  கடவுளை” யென்றும், “நன்காண்ட வென்றது,
வலித்த” தென்றும் கூறுவர்.