14 - 18. ஈரம்.........................தோன்றலை . உரை : ஈரமுடைமையின் நீரோர் அனையை - நெஞ்சிலே தண்ணிய அன்புடைய னாதலால் தண்ணீரை யொத்துள்ளாய் ; அளப்பருமையின் இரு விசும்பு அனையை - அளத்தற்கரிய சூழ்ச்சி யுடையனாதலால் பெரிய விசும்பை யொத்துள்ளாய் ; கொளக் குறைபடாமையின் முந்நீ ரனையை - இரவலர் வரைவின்றிக் கொள் ளுதலுற்றவழியும் செல்வம் குறைபடாமையால் கடலை யொப்பாய் ; பன்மீன் நாப்பண் திங்கள் போல - பலவாகிய விண்மீன்களுக்கிடையே விளங்கும் திங்களைப் போல ; பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை - எல்லா நலங்களாலும் நிறைந்து விளங்கும் சுற்றத்தாரிடையே விளக்கமுற்றுத் தோன்றுதலை யுடையாய் எ - று. கனலிய பொருள் யாதாயினும் வந்த வழி அதனை யகத்திட்டுத் தண்ணிதாக்கும் நீர்போல, தக்கோர் யாவராயினும் வந்தவழி அவரை விரைந்து தழீஇக் கொண்டு அன்பு செய்தல் பற்றி, “நீரோ ரனையை” யென்றார். அஃகி யகன்ற சூழ்ச்சியுடைமை பற்றி, “இருவிசும்பனையை” யென்றார், போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும் விளக்குதற்கு ஆசிரியர் முரஞ்சியூர் முடிநாகனார் “மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும்” (புறம். 2) என்று கூறுதல் காண்க. கொள்ளக் குறைபடாத செல்வமுடைமையை, “வருநர் வரையாச் செழும் பல் தாரம், கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப” (பதிற். 88) என்று பிறாண்டும் கூறியிருத்தலை யறிக. “மழை கொளக் குறையாது புனல்புக மிகாது,கரைபொரு திரங்கு முந்நீர், (மதுரைக். 424-5) என்பது பற்றி, “முந்நீ ரனையை” என்றார.் சுற்றத்து நடுவே விளங்குதல் பற்றி, பன்மீன், நடுவண் விளங்கும் திங்களை யுவமை கூறினார் ; “பன்மீன் நடுவண் திங்களை போலவும், பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி” (மதுரைக். 769-70) எனப் பிறரும் கூறுப. தாதும் மணமும் நிறைந்தவழி மலர் பூத்தல் போல, செல்வமும் புகழும் சிறந்த சுற்றமென்றற்கு, “பூத்த சுற்றமொடு” என்றார் ; இது குறிப் புருவகம் . நீரோ ரனையை யென்புழி, ஓர், அசைநிலை. விறன் மாந்தரன் விறன் மருக என முன்னிலைப்படுத்திய ஆசிரியர் இதனால் அவன் நலம் பலவும் எடுத்தோதிப் பாராட்டினாராயிற்று. 19 - 24. உருகெழு..................................உம்பல் . உரை : உருகெழு மரபின் அயிரை பரவியும் - அச்சந்தரும் முறையினையுடைய அயிரை மலையிலுள்ள கொற்றவைக்கும் பரவுக் கடன் செய்தும் ; கடல் இகுப்ப வேலிட்டும் - கடலிடத்தே வந்து பொருத பகைவர் கெட வேற்படையைச் செலுத்தியும்; உடலுநர் மிடல் சாய்த்தும் - நிலத்தே வந்து பொருத பகைவரது வலியை யழி்த்தும் ; மலையவும நிலத்தவும் அருப்பம் வௌவி - மலையிலும் நிலத்திலும் பகைவர் கொண்டிருந்த அரண்களை வென்று கைப்பற்றியும் ; பெற்ற பெரும் |