பெயர் பலர் கை இரீஇய கொற்றத் திருவின் உரவோர் - பெற்ற பெரும் பொருளைப் பலர்க்கும் வழங்கியதனாலுண்டாகிய கொற்றமும் செல்வமுமுடைய திண்ணியோராய முன்னோருடைய ; உம்பல் - வழித்தோன்றலே எ - று. “அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து, தும்பை சான்ற மெய் தயங் குயக்கத்து, நிறம்படு குருதி புறம்படி னல்லது, மடை யெதிர் கொள்ளா, அஞ்சுவரு மரபிற் கடவுள் அயிரை” (பதிற். 79) என்ப வாகலின், “உருகெழு மரபின் அயிரை பரவியும்” என்றார். கடலிகுப்ப வேலிட்டவன், கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் . உடலுநர் மிடல் சாய்த்து அகநாடு புக்கவர் அருப்பம் வௌவி மேம்பட்ே்டார். பல்யானைச் செல்கெழு குட்டுவன் முதலாயினோராவர். பெரும் பெயர் என்புழிப் பெயர் என்றது பொருளை ; பொருளால் ஒருவர் பெயர் நின்று நிலவுதலின், பெயர் எனப்பட்டது . “பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்” (தொல். சொல். 11) என்புழிப் “பெயரென்றது பொருளை” யெனச் சேனாவரையரும் கூறுதல் காண்க. பெற்ற பொருளைத் தனக்கென ஓம்பாது புலவர் பாணர் முதலாயினார்க்கு வழங்கிப் புகழ் பெறுவது இயல்பாதலால், “பெற்ற பெரும் பெயர் பலர்கை இரீஇய கொற்றத் திருவின் உரவோர்” என்றார். இனிப் பழையவுரைகாரர், “கட லிகுப்ப வென்றது கடலைத் தாழ்க்கவேண்டி யென்றவா” றென்றும், “அருப்பம் வௌவி மிடல் சாய்த்தெனக் கூட்டுக” வென்றும், “பெயரென்றது பொருளை” யென்றும் கூறுவர். 25 - 30. கட்டி............................வேந்தே . உரை : கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே - சர்க்கரைக் கட்டி கலந்த அவரை முதலியவற்றாலாய உணவினை யுண்ணும் கொங்கருக்கு அரசே ; மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே கள்ளொடு கூடிய உணவினையுடைய குட்ட நாட்டவர்க்குத் தலைவனே ; எழாஅத் துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை தம்பாற் றோற்று அழிந்தார்மேல் போர்க் கெழாத இணையான தோள்களையுடைய பூழி நாட்டவர்க்கு மெய்புகு கருவி போன்றவனே ; இறங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந - ஒலிக்கின்ற கடற் பரப்பின் கரையிடத்தே யுள்ள மரந்தை நகரிலுள்ளார்க்குத் தலைவனே ; வெண்பூ வேளையொடு சுரை தலை மயக்கிய - வெள்ளிய பூவையுடைய வேளைக்கொடியும் சுரைக்கொடியும் தம்மிற் கலந்து படர்ந்திருக்கும் ; விரவு மொழிக் கட்டூர் - பல வேறு மொழிகளைப் பேசுவோர் கலந்திருக்கும் பாடி வீடுகளையுடைய ; வயர் வேந்தே - வீரர்க்கு அரசனே எ - று. அவரை முதலியவற்றின் விதைகளை யிடித்துப் பெற்ற மாவோடு சர்க்கரையைக் கலந்தமைத்த உணவினை, “கட்டிப் புழுக்கு” என்றும், கொங்கு நாட்டவர்க்கு ஈது உணவு என்பார், “புழுக்கிற் கொங்கர் கோவே” என்றும் கூறினார். குட்டுவர், தாம் உண்ணும் உணவோடு கள்ளினையும் |