சேர வுண்ணுப வென்றற்கு, “மட்டப் புகாவிற் குட்டுவ” ரென்றார். “தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்” (பதிற். 42) என்றதனால் மட்டத்தின் இயல்புணரப்படும். இனிப் பழையவுரைகாரர், “கட்டிப் புழுக்கு என்றது, கட்டியொடு கூட்டின அவரைப் பரல் முதலான புழுக்கு” என்றும், “மட்டப்புகா வென்றது, மதுவாகிய வுண” வென்றுங் கூறுவர். அறத்திற் றிறம்பாது பொருது நிலைநாட்டும் வன்மையே சான்றோரால் பாராட்டப்படு மாதலின், போரி லழிந்து புறங்காட்டினார் மேல் எழாத பூழியரது அறப்போர் நலத்தை வியந்து, “எழாஅத் துணைத் தோட்பூழியர்” என்றார். பழையவுரைகாரரும், “எழாஅத் துணைத்தோளென்றது, போரில் முதுகிட்டார் மேற் செல்லாத இணை மொய்ம்பு” என்பர். மரந்தை, மேலைக் கடற்கரையில் சேரர்க் குரித்தாயதோர் நகரம். கடற்கரை நகர மென்பது, “இரங்குநீர்ப் பரப்பின் மரந்தை” என்பதனால் இனிது விளங்கும் . இது குட்டுவ னென்னும் சேர வேந்தனால் நிறுவப் பெற்றமை தோன்றச் சான்றோர், “குட்டுவன் மரந்தை” (குறுந். 34) என்றும், “குரங்குளைப் புரவிக் குட்டவன் மரந்தை” (அகம். 376) என்றும், கூறுப. பகைவரொடு போர்செய்தல் வேண்டித் தானையொடு சென்ற வேந்தர், போரெதிர்தல் வேண்டித் தங்குதற்காகச் சமைக்கப்படும் பாடி வீடுகள் “கட்டூர்” என்றும், பல நாடுகளினின்றும் வந்த மக்களாகிய தானையாதலாலும், அவர் தத்தம் மொழிகளையே பேசுதலாலும், “விரவுமொழிக் கட்டூர்” என்றும் கூறினார்: “விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ” (அகம் . 212) என்று பிறரும் கூறுவர். பாடிவீடுகளில் வேளைக்கொ டியும் சுரைக்கொடியும் தம்மில் விரவிப் படர்ந்திருப்பது தோன்ற, “வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய கட்டூர்” என்றார். இதனால், இச் சேரமான் கொங்குநாடு, குட்டநாடு, பூழிநாடு, குடநாடு என்பவற்றைத் தனக்குரியனாய், அந்நாட்டவர் பரவும் நல்லரசனாய் விளங்கிய திறம் கூறினாராயிற்று. 31 - 40. உரவுக்கடல்................................புகழோயே . உரை : உரவுக் கடலன்ன தாங்கருந் தானையொடு - பரப்பினையுடைய கடல் போன்ற பகைவரால் தடுத்தற்கரிய தானையையும் ; மாண்வினைச் சாபம் மார்புற வாங்கி - மாட்சிமைப்பட்ட தொழிற்பாட்டையுடைய வில்லை மார்பளவும் வளைத்தலால் ; ஞாண் பொர விளங்கிய வார்ந்து புனைந்தன்ன வலிகெழு தடக்கை - அதன் நாண் உராய்தலால் விளக்கமுற்ற நீண்டு ஒப்பனை செய்தாலொத்த வலி பொருந்திய பெரிய கையினையும் ; ஏந்து குவவு மொய்ம்பின் - உயர்ந்த திரண்ட வலியுற்ற தோளினையும் ; மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில் - விண்மீன் போல் விளங்குகின்ற மணிகள் வைத்துத் தைக்கப் பெற்ற பக்கரையையும் ; ஆய் மயிர் கவரிப் பாய் மா மேல்கொண்டு |