அழகிய கவரி மயிராலாகிய தலையாட்டத்தையு முடைய பாய்ந்து செல்லும் குதிரை யிவர்ந்து ; காழ் எஃகம் பிடித்து எறிந்து - காம்பையுடைய வேற்படையைப் பற்றிப் பகைவர் மேலெறிந்து ; விழுமத்திற் புகலும் - அவரெய்தும் துன்பத்தைக் கண்டு அதனையே மேன்மேலும் செய்தற்கு விரும்பும் ; பெயரா ஆண்மை - நீங்காத ஆண்மையினையும் ; காஞ்சி சான்ற வயவர் பெரும - நெஞ்சிலே நிலையாமை யுணர்வினையு முடைமையாற் பிறக்கும் வலிமிக்க வீரரையுமுடைய தலைவனே ; வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே - மிக்க பெருஞ்சிறப்பினால் உயர்ந்த புகழையுடையோனே எ - று. தானையும், தடக்கையும், மொய்ம்பும், வயவரு முடைய பெரும என்றும், புகழோ யென்றும் இயையும். வயவரை வேறு பிரித்துக் கூறுதலின், தானை யென்றது, களிறும் மாவும் தேரும் என்ற மூன்றையும் எனக் கொள்க. பரப்பும் பெருமையுந் தோன்ற, “உரவுக் கடலன்ன” என்றும், பகைவரால் வெலற் கருமை தோன்ற, “தாங்கரும் தானை” யென்றும் கூறினார் . மார்புற ாங்கி அம்புகளை மழைபோலச் சொரியும் தளர்ச்சியுறாத வலிய கட்டமைந்த வில்லென்பதற்கு, “மாண்வினைச் சாபம்” என்றும், பலகாலும் வாங்கி அம்பினைத் தொடுத்தலால், நாண் உராய்ந்து காழ் கொண்டு விளங்குதலின், கையினை, “ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை” யென்றும் கூறினார். வில்லை மார்புற வாங்குமிடத்தும், நாணைப் பற்றி அம்புதொடுக்கு மிடத்தும், விரைவும், இலக்குத் தவறாமையும் வன்மையும் கொண்டு, விற்போ ருடற்றற்கண் கைகளே மிக்க வலியும் பெருமையு முடையவாதல் வேண்டுதலின், “வலிகெழு தடக்கை” என்று சிறப்பித்தார் ; இதுபற்றியே இப்பாட்டிற்கும் இது பெயராயிற் றென்க . பழையவுரைகாரர், “ஞாண் பொர என்றது நாண் உரிஞுதலால்” என்று பொருள் கூறி, “இவ்வடைச் சிறப்பானே இதற்கு வலிகெழு தடக்கை யென்று பெயராயிற்” றென்பர். “நிமிர் பரிய மா தாங்கவும், ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச், சாப நோன்ஞான் வடுக்கொள வழங்கவும், பரிசிலர்க் கருங்கல நல்கவும் குருசில், வலிய வாகு நின் றாடோய் தடக்கை” (புறம். 14) எனச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாராட்டிக் கூறுதலும் ஈண்டுக் குறித்து நோக்கத் தக்கதாம் இவ்வாறு வலியும் பெருமையுமுடைய கைகட்கேற்ப, அமைந்த தோள்களின் சிறப்பை, “எந்து குவவு மொய்ம்பின்” என்றார். மொய்ம்பு, ஈண்டு ஆகுபெயராற் றோள்களைக் குறித்து நின்றது. மொய்ம்பு, வலி . பழையவுரைகாரர், மொய்ம்பினைத் தடக்கைக் கேற்றி, “மொய்ம்பினையுடைய தடக்கையென மாறிக் கூட்டுக” என்பர். சேரமான் இவர்ந்து செல்லும் குதிரைக்குப் பக்கங்களில் வட்டமாகப் புனையப் பெற்றுக் கட்டியிருக்கும் பக்கரையைப் “பாண்டில்” என்றும், அதனிடத்தே கோத்துத் தைக்கப் பெற்றிருக்கும் வெண்மணிகளை, “மீன் பூத்தன்ன விளங்குமணி” யென்றும் கூறினார் . அதற்குத் தலையிற் காட்டிய தலையாட்டம் கவரிமயிராலாய தென்றற்கு, “ஆய் மயிர்க் கவரி” யென்றார். |