கூந்தல் - வண்டு மொய்க்கும் கூந்தலையும் ; ஒண்ெ்டாடி கணவ -ஒள்ளிய தொடியையு முடையாட்குக் கணவனே எ - று. மஞ்ஞை ஆலும் நாடு, காவிரிப் படப்பை நாடு என இயையும் . கழனிக்கண் தொழில் புரியும் உழவர், தாம் வித்திய நெல் விளைந்தவழி யதனை யரியுங்கால் தண்ணுமை யிசைத்தல் மரபாதலின், “கழனி யுழவர் தண்ணுமை” யென்றார் ; “வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇப், பழனப் பல்புள் ளிரிய” (நற். 350) என்று பிறரும் கூறுதல் காண்க. மயில், மழைமுகிலைக் கண்டு தன் தோகையை விரித்தாடுவது இயல்பாதலால், தண்ணுமையின் முழக்கம் மழை மழக்கம் போல்வது கண்டு மயில் ஆலுவதாயிற் றென்றற்கு, “மழைசெத்தாலும்” என்றும், மருதநிலத்தேயுள்ள மயிலென்றற்குப், “பழன மஞ்ஞை” என்றும் கூறினார். புனலாடுவோர் பெருங் கூட்டமாகச் சென்று பல்வகை வாச்சியங்கள் இயம்ப நீர்விளையாட்டயர்தல் பண்டைநாளை மரபாதலின், “தண் புன லாடுந ரார்ப்பொடு” என்றார். வெவ்விய போர்த்தொழில் பயிலும் மறவர், போர்க்குரிய தடாரிப்பறையை முழக்க, அதனிசை புனலாட்டாரவாரத்தோடு கலந்து முழங்கிற் றென்பதாம் . கூழ், செல்வம் ; சோறுமாம் வேளாளரில்லங்களில் உள்ள ஆனேறுகள் அம்முழக்கங் கேட்டு, மருண்டு தம்முண் முரண்கொண்டு முழங்கின வென்பார், “ஏறு மாறு சிலைப்ப” என்றார் ; “ஆமா நல்லேறு சிலைப்ப” (முருகு. 315) என்று பிறரும் கூறுப. “ஏறுமாறு சிலைப்ப என்றது, ஏறுகள் ஒன்றற்கொன்று மாறாக முழங்க வென்றவா” றென்பது பழையவுரை. செழும்பல கொழும்பல என்புழிப் பன்மை முறையே ஊர்கள் மேலும் வயல்கள் மேலும் நின்றன. ஊர்கட்குச் செழுமையும், வயல்கட்குக் கொழுமையும் சிறப்புத் தருவனவென வுணர்க. காவிரியாறு கடலொடு கலக்குமிடத்து அது கொணரும் வண்டல் தங்கி நாளடைவிற் பெருகிக் காவிரி பாயும் பூம்புனல் நாடு படைக்கப்பட்ட (Delta) தாகலின், ‘காவிரிப் படப்பை நன்னா” டெனப்பட்டது . படைப்பு எனப்படல் வேண்டுமாயினும், அச்சொல் நிலஞ் சுட்டாது பொருளையே சுட்டி நிற்றலின், நிலஞ் சுட்டும் வகையில் படப்பையாகிப் பின்பு “படப்பை” யென வழங்குவதாயிற்றெனக் கொள்க. “டெல்டா” என்ற பகுதிகளைப் பண்டையோர் “படப்பை யென வழங்கியதுபோல, ஹார்பர் (Harbour) எனப்படு்ம் துறைமுகங்களைப் பண்டைத் தமிழர் “நாவாய்க் குளம்” என வழங்கினர் என, ஆசிரியர் திரு . சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் கூறுகின்றார்கள் . மகளிர் நலத்துக்குச் சிறப்புடைய நகரங்களையும், நாடுகளையும் உவமமாகக் கூறுவது பண்டையோர் மரபாதலின், “நன்னாடன்ன ஒண்ெ்டாடி” யென்றார். “குட்டுவன், மரந்தையன்ன வென்னலம்” (அகம். 376) என்று சான்றோர் கூறுவது காண்க. குடைச்சூல் சிலம்பு ; குடைச்சூலை யுடைமைபற்றி, இப்பெயர், பெறுவதாயிற்று. “குடைச்சூற் சித்திரச் சிலம்பு” (சிலப். 16: 118-9) என்பதற்கு “புடைபட்டு உட்கருவை யுடைய சித்திரத் தொழிலை யுடைத்தாகிய சிலம்பு” என்று உரை கூறி, “குடைச்சூல், குடைபடுத லென்பாரு முளர்” என்று கூறினர் அடியார்க்கு நல்லார் ; அதன் அரும்பதவுரைகாரர், “குடைச்சூல், புடை |