பக்கம் எண் :

485

தாழ்த்தல்  ;  உள்ளுட்  டாழ்த்தலுமாம்”  என்பர் . சித்திரத் தொழில்
நிறைந்து விளங்குமாறு தோன்ற “வளங்கெழு குடைச்சூல்” என்றார்.
  

பெருநல     முடையளா யிருந்தும், அடக்கத்தையே  பொருளாகக்
கொண்டொழுகிய   சிறப்பினால்,  “அடங்கிய  கொள்கை”  யென்றும்,
அக்கொள்கையின்   பயன்   கணவன்பால்   சிவந்து  துனித்தற்குரிய
காரணங்கள்  உளவாகிய வழியும், அது செய்யாது இன்சொல்லும் பணி
நடையும்  கொண்டிருப்பது  தோன்ற  “ஆறிய கற்பு” என்றும், இ்ன்ன
நன்னடையால்  மனைக்கு  விளக்காய்  வண்புகழ்  கொண்டு யாவரும்
பரவ  இருக்கும்  நலம்  விளக்குவார்,  “தேறிய  நல்லிசை”  என்றும்
கூறினார்  ;  பிறரும், வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குக்
கூறும்     கூற்றில்     வைத்து,     “திருநகரடங்கிய       மாசில்
கற்பின்.............அணங்குசாலரிவை” (அகம். 114) என்பது காண்க.
  

இவ்வாறு    தேவியின்     குணநலம்    கூறியவர்,    உருநலம் 
கூறலுற்று, “வண்டார் கூந்த லொண்டொடி” யென்றார்.
  

51 - 57. நின்னாள்..........................கிழவோயே .

உரை :   நின்நாள்  திங்கள்  அனையவாக  -  ஒரு  திங்களின்
காலவளவு   நின்   வாழ்நாளின்   ஒருநாள்  அளவாகுக  ; திங்கள்
யாண்டோர்  அனையவாக - நின் வாழ்நாளில் ஒரு திங்களின் அளவு
ஓர்  யாண்டின்  கால  வளவிற்றாகுக;  ஆண்டு ஊழி அனையவாக -
வாழ்நாளில்    ஓர்   யாண்டினளவு   ஊழியளவிற்றாகுக   ;  ஊழி
வெள்ளவரம்பினவாக  -  வாழ் நாளின் ஊழிக்கால வெல்லை வெள்ள
மென்னும்  காலவெல்லையின்  அளவிற்றாகுக ; என உள்ளி - என்று
கருதி  வாழ்த்திக்கொண்டு; செருமிக்கு உருமென முழங்கும் முரசின் -
போரில்  மேம்பட்டு  இடி போல  முழங்கும் முரசினையும்; பெருநல்
யானை  -  பெரிய நல்ல யானைகளையுமுடைய ; இறை கிழவோய் -
இறைமைத்  தன்மைக் குரியோனே ; யான் காண்கு வந்திசின் - யான்
நின்னைக் காண்பேன் வந்தேன் எ - று.
  

உலகவர்     கூறும்  திங்களும், யாண்டும், ஊழியும், வெள்ளமும்
முறையே நின் வாழ்நாளின் நாளும், திங்களும், யாண்டும், ஊழியுமாக
நீடுக  என்பதாம்.  ஊழி, எண்பது யாண்டுகளின் கால லளவு போலும்.
பல  வூழிகளின்  எல்லை  வெள்ள வரம்பு.  “வெள்ள வரம்பி னூழி
போகியும், கிள்ளை  வாழிய” (ஐங். 281) எனச் சான்றோர் கூறுதலால்,
காலக் கணக்கின் வரம்பு வெள்ளமென்று துணியலாம்.
  

பிறவியிலே     இறைவனாதற்குரிய நன்மாண்பனைத்தும் ஒருங்கு
பெற்றுத்   தோன்றினா   னென்றற்கு,  “இறை  கிழவோய்” என்றார்.
இறைவனாதற்குரிய   உரிமை,  இயற்கை  யறிவோடு  கல்வி கேள்வி
முதலியவற்றாலுண்டாகும்   செயற்கை   யறிவும்  பிறவும் பெற்றவழி
யெய்துவதாக,  அவையாவும் கருவிலே யுடைய னென்றற்கு இவ்வாறு
கூறினாரென வுணர்க.