பக்கம் எண் :

486

இதுகாறுங்     கூறியவாற்றால், “விறன் மாந்தரன் விறன் மருக, நீ,
நீரோரனையை,  இருவிசும்பனையை, மூந்நீரனையை, பூத்த சுற்றமொடு
பொலிந்து தோன்றலை, கொற்றத் திருவின் உரவோர் உம்பல்,கொங்கர்
கோவே,   குட்டுவர்  ஏறே,  பூழியர்  மெய்ம்மறை  ;  மரந்தையோர்
பொருத,  வயவர்  வேந்தே,  பெரும, ஓங்கு  புகழோயே, ஒண்டொடி
கணவ,  இறை  கிழவோய்,  நின்  நாள்  திங்க ளனையவாக, திங்கள்
யாண்டோ  ரனையவாக, யாண்டே  ஊழி யனையவாக, ஊழி வெள்ள
வரம்பினவாக என உள்ளி, யான் காண்கு வந்திசின் என்பதாம். இனிப்
பழையவுரைகாரர்,  “மருக,  உம்பல், கொங்கர் கோவே, குட்டுவரேறே,
பூழியர்  மெய்ம்மறை,  மரந்தையர் பொருந, வயவர் வேந்தே, வயவர்
பெரும,   ஓங்கு   புகழோய்,   ஒண்டொடி  கணவ, இறைகிழவோய்,
ஈரமுடைமையின்    நீரோ    ரனையை   ;   அளப்   பருமையின்
விசும்பனையை ; கொள்ளக் குறைபடாமையின் முந்நீரனையை ; பூத்த
சுற்றமொடு  பொலிந்து  தோன்றுதலை யுடையை ; ஆதலால், நினக்கு
அடைத்த   நாட்கள்,   உலகத்தில்   திங்களனையவாக   வென்றும்,
நின்னுடைய   திங்கள்   யாண்டனையவாக  வென்றும்,  நின்னுடைய
யாண்டு  ஊழியனையவாக  வென்றும்,  நின்  யாண்டிற்  கொப்பாகிய
அப்பல்லூழி    தம்மளவிற்பட்ட    பலவாய்    நில்லாது   வெள்ள
வரம்பினவாக  வென்றும்,  நினைத்து நின்னைக் காண்பேன் வந்தேன்
எனக்கூட்டி வினைமுடிவு செய்க” என்று கூறுவர்.
  

இதனாற்     சொல்லியது  அவன்  தண்ணளியும்   பெருமையும்
கொடையும்  சுற்றந்தழாலும் உடன்கூறி வாழ்த்தியவா றாயிற்று. ஒளிறு
என்பது  முதலாக  நான்கடியும்,  அறன்  வாழ்த்த  என்பது முதலாக
இரண்டடியும், கடலிகுப்ப என்பது முதலாக இரண்டடியும், காழெஃகம்
பிடித்தெறிந்து  என  ஓரடியும் வஞ்சி யடியாக வந்தமையான் வஞ்சித்
தூக்குமாயிற்று.
  

நின்னா ளென்பது கூன்.

ஒன்பதாம் பத்து மூலமும் உரையும் முற்றும்.

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய

பதிற்றுப்பத்து மூலமும்

ஆசிரியர், ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள்

விளக்க வுரையும் முடிந்தன.