பக்கம் எண் :

487

பதிகங்களின் பழையவுரைக் குறிப்பு  

பதிற்றுப்பத்திற்      காணப்படும் பதிகங்கள் இடைக்காலச் சோழ
பாண்டியர்  கல்வெட்டுக்களிற்  காணப்படும் மெய்க் கீர்த்திகள் போல
வரலாற்றுக்  குறிப்புக்கொண்டு  எளிய  நடையில் அமைந்திருத்தலால்
அவற்றிக்கு  ஏனைப்பாட்டுக்கட்  கெழுதியபோல  உரை  யெழுதுவது
வேண்டா  என  இந்நூலைப் பயிலும் மாணவர்களே விரும்பாராயினர்.
அதனால்  அவற்றிற்கு  இங்கே உரை யெழுதப்படவில்லை. ஆயினும்,
சிற்சில   தொடர்கட்குப்   பழையவுரைக்   குறிப்பு  நல்ல  விளக்கந்
தருகின்றது. அதனால், அதுமட்டில் இங்கே ஏட்டிற் காணப்பட்டபடியே
தரப்படுகின்றது.
  

இரண்டாம்  பத்து : - இதன் பதிகத்து யவனர்ப் பிணித்தென்றது,
யவனரைப்  போருள்  அகப்படுத்தி யென்றவாறு. நெய்தலைப் பெய்து
கைபிற்கொளீஇ  யென்பதற்கு  அக்காலத்துத்  தோற்றாரை நெய்யைத்
தலையிற்   பெய்து   கையைப்   பிறகு  பிணித்து  என்று  உரைக்க.
அருவிலை   நன்கலம்   வயிரமொடு   கொண்டு   என்றது,  அந்த
யவனரிடைப்   பின்தண்டமாக  அருவிலை   நன்கலமும்  வயரிமுங்
கொண்டு எ - று.
  

மூன்றாம்   பத்து : இதன் பதிகத்து அகப்பா எறிதலைப் பகற்றீ
வேட்டற்கு  அடையாக்கி  யுரைக்க. முதியரை மதியுறழ் மரபின் தழீஇ
மண்வகுத்  தீத்தெனக்  கூட்டித்  தன்  குலத்தில் தனக்கு முதியாரை
மதியோடொத்த தன் தண்ணளியால் தழீஇக்கொண்டு அவர்க்குத் தன்
நாட்டைப்   பகுத்துக்  கொடுத்தென  வுரைக்க.  இருகடலு மென்றது,
தன்னதாய  மேல்கடலும்  பிற  நாட்டதாய்ப்  பின்பு  தான் பொருது
கொண்டு    தன்னாடாக்கிய    நாட்டிற்    கீழ்கடலும்   எ  -  று.
கருங்களிற்றியானைப்  புணர்நீரை நீட்டி இருகட னீரு மொரு பகலாடி
யென்றது,  அவ்விரு  முந்நீரும் ஒரு பகலிலே வரும்படி யானைகளை
நிரைத்து  அழைப்பித்து  ஆடி  எ  - று. அயிரை பரைஇ யென்றது,
தன்னாட்டு   அயிரை  யென்னும்  மலையில்  வாழும்  கொற்றவைக்
கடவுளைத்  தன்  குலத்துள்ளார்  செய்துவரும்  வழிபாடு  கெடாமல்
தானும்   வழிபட்டு   எ   -  று.  ஆற்றல்  சால்  முன்போடு காடு
போந்தவெனக்  கூட்டுக. நெடும்பாரதாயனார்  முந்துறக் காடு போந்த
என்றது,  தன்  புரோகிதராகிய  நெடும்பாரதாயனார் தனக்கு முன்னே
துறந்து  காடுபோக,  அது  கண்டு தானும் துறவுள்ளம் பிறந்து துறந்து
காட்டிலே போன எ - று.
  

நான்காம் பத்து : இதன் பதிகத்துக் கடம்பின் பெருவாயிலென்றது
அந்  நன்னனூரை  நிலைச்செரு  வென்றது, அந்நன்னன் நாடோறுஞ்
செய்த போரினை.
  

ஐந்தாம்  பத்து :  இதன்   பதிகத்துக் கடவுட் பத்தினி யென்றது
கண்ணகியை.    இடும்பிலென்றது,   இடும்பாதவனத்தை.   புறம்   -
அவ்விடம்.