வாலிழை கழித்த பெண்டிர் என்றது, அப்பழையன் பெண்டிரை. கூந்தல் முரற்சி யென்றது, அவர் கூந்தலை யரிந்து திரித்த கயிற்றினை. குஞ்சரவொழுகை பூட்டியது, அப்பழையன் வேம்பினை ஏற்றிக்கொண்டு போதற்கு குடிக்குரியோ ரென்றது, அரசிற் குரியாரை. ஆறாம் பத்து : இதன் பதிகத்துத் தண்டாரணிய மென்றது, ஆரிய நாட்டிலே உள்ளதோர் நாடு. கபிலை யென்றது, குராற்பசு. ஏழாம் பத்து : இதன் பதிகத்து ஒரு தந்தையென்றது, பொறையன் பெருந்தேவியின் பிதாவுடையது ஒரு பெயர். வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி யென்றது, யாகம் பண்ணின காலத்திலே மற்றுள்ள அறத்துறைகளையும் செய்து முடித்து எ - று. மாய வண்ணனை மனனுறப் பெற்றென்பது, திருமாலை வழிபட்டு அவனுடைய மனம் தன்பாலேயாம்படி பெற்று எ - று. புரோசு மயக்கி யென்றது, தன் புரோகிதனிலும் தான் அறநெறி யறிந்து எ - று.சிறுபுற மென்றது, சிறுகொடை. எட்டாம் பத்து : இதன் பதிகத்துக் கொல்லிக்கூற்ற மென்றது, கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினை. நீர் கூர் மீமிசையென்றது, அந்நாட்டு நீர் மிக்க மலையின் உச்சியை. நொச்சி தந்தென்றது, தகடூர் மதிலைக் கைக்கொண்டு எ - று. ஒன்பதாம் பத்து : இதன் பதிகத்து விச்சி யென்பான்,ஒரு குறுநில மன்னன். வஞ்சி மூதூர்த் தந்து என்றது, அவர்களை வென்று கொண்ட பொருள்களை ; பசுவும் எருமையும் ஆடுமென்பாரு முளர். அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசு மயக்கி யென்றது, தன் மந்திரி யாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி யறிவானாகப் பண்ணி எ - று. |