பக்கம் எண் :

489

இடம் விளங்காத

பதிற்றுப்பத்து பாட்டுக்கள்
 

1. இருங்கண் யானையோ டருங்கலந் துறுத்துப்
பணிந்து வழிமொழித லல்லது பகைவர்
வணங்கா ராதல் யாவதோ மற்றே
உருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக்
கண்ணதிர்பு முழங்குங் கடுங்குரன் முரசமொடு
கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முளை
எரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து
நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி
நீர்துனைந் தன்ன செலவின்
நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே.
 
2.  இலங்குதொடி மருப்பின் கடாஅம் வார்ந்து
நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சரம்
எரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக்
கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி
கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ
டூன்வினை கடுக்குந் தோன்றல் பெரிதெழுந்
தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
கண்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக்
கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக்
கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப
நெடுமதி னிரைஞாயிற்
கடிமிளைக் குண்டு கிடங்கின்
மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎம்
நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ
ஒல்லா மன்னர் நடுங்க
நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே.