5

முன்னுரை

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
  

சங்கத்தொகை     நூல்கள் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமென
வகையால் இரண்டாகியும், விரியால் பதினெட்டாகியும் நிலவுவனவாகும்.
இவற்றுள்    பதிற்றுப்பத்தென்பது   எட்டுத்தொகையுள்   ஒன்றாகும்.
இதுபப்பத்தாக  அமைந்த  பத்துக்கள்  பத்துக்கொண்டதென்றும், நூறு
பாட்டுக்கள்  கொண்டதென்றும்  பதிற்றுப்பத்து எனப்படும் பெயராலே
அறியலாம்.     இதன்     ஒவ்வொரு     பத்தும்       ஒவ்வொரு
சேரவேந்தனைப்பற்றி     வேறு     வேறு     ஆசிரியன்மார்களால்
பாடப்பட்டுளது.    இந்த   ஆசிரியன்மார்களும்   சேரவேந்தர்களும்
ஒருகாலத்தவராகவும்       வேறு      வேறு      காலத்தவராகவும்
கருதப்படுகின்றனர்.  பதிற்றுப்பத்தென்னும்  பெயர்  இப்பாட்டுக்களைப்
பப்பத்தாக   எடுத்துத்   தொகுத்தோரால்   இடப்பெற்ற   பெயராதல்
வேண்டும்.
  

எட்டுத் தொகையுள் காணப்படும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு
நூறு,  பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
என்ற    எட்டனுள்,    புறப்பொருள்    வகையில்    அமைந்தவை
பதிற்றுப்பத்தும், புறநானூறும் என்ற இரண்டுமாகும்.  இவை யிரண்டும்,
ஏனையவற்றுள்  நற்றிணை,  கலித்தொகை யென்ற இரண்டு மொழிந்த
பிற  யாவும்  காலஞ்  சென்ற  பெரும்புலவர்  டாக்டர். திரு. உ. வே.
சாமிநாதையரவர்களால்  பல  ஆண்டுகட்கு  முன்பே  பல ஏடுகளின்
துணைகொண்டு    ஆராய்ந்து   செவ்விய   முறையில்  வெளியிடப்
பெற்றுள்ளன.  அவற்றுள் பதிற்றுப்பத்து 1904-ஆம் ஆண்டில்  முதன்
முதலாக   அச்சிடப்பெற்று   வெளியாயிற்று.  இவ்வாறு  தமிழகத்துத்
தமிழரது  இலக்கியப்  பழஞ்  செல்வமாய், பல நூற்றாண்டுகட்கு முன்
வாழ்ந்த  தமிழ்  நன்மக்களது  நாகரிகப்  பண்பாடுகளை  யுணர்த்தும்
நல்விளக்கமாய்த்  திகழும்  இந்தத்  தொகை நூல்களைச்  செம்மையுற
ஆராய்ந்து   இன்றும்   என்றும்  தமிழ்  பயில்வோர்   அனைவரும்
ஒருமுகமாகப்  பாராட்டிப்  பரவத்தக்க  வகையில்  வெளியிடுவதாகிய
அரிய  தமிழ்ப்பணி  புரிந்த  டாக்டர். திரு. ஐயரவர்கட்குத் தமிழுலகு
பெரிதும் கடமைப்பட்டுளது.
  

திரு.     ஐயரவர்கள் முதன்முதலாக வெளியிட்டபோதே இதற்குப்
பண்டைச்  சான்றோர்  ஒருவர்  எழுதிய  உரையும் அவர்க்கு உடன்
கிடைத்தமையின்,   முதல்  வெளியீட்டிலே  பதிற்றுப்பத்து  மூலமும்
பழையவுரையும்   என   வெளியிட்டு,   இதனை   அறிஞர்  கண்டு
பொருளறிந்து இன்புறும்