பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன் - செறிந்த இருளில் சுடுகாட்டை விரும்பி அவ்விடத்தே நின்று ஆடிய திருக்கூத்தை யுடையனாய்; நீடிய புறம் புதை தாழ்ந்த சடையன் - நீண்ட முதுகின் புறத்தே வீழ்ந்து அதனை மறைத்த தாழ்ந்த சடையை யுடையனாய்; வெண்மணி குறங்கு அறைந்து ஆர்க்கும் விழவினன் - வெள்ளிய மணிகள் குறங்கின் (துடையின்) புடையே இயக்கப்பெற்று ஒலிக்கும் விழாவினை யுடையனாய்; நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் - நுண்ணிய நூலாற் கட்டப்பட்ட துடியினை மாறியொலிக்கும் விரலை யுடையனாய்; இரண்டு உருவாய் ஈரணி பெற்ற எழிற்றகையன் - ஆணும் பெண்ணுமாகிய இருவகையுருவும் ஓருருவிற் பெற்று அவ்விருகை யுருவுக் கேற்பத் தோடு்ங் குழையுமாகிய இருவகை யணிகளாற் பொலிந்த அழகை யுடையனாய்; ஏரும் இளம் பிறை சேர்ந்த நுதலன் - வளர்கின்ற இளம்பிறைத் திங்கள் தங்கிய நுதலை யுடையனாய்; களங் கனி மாறேற்கும் பண்பின் மறு மிடற்றன் - நிறத்தால் களங்கனி தான் நிகரொவ்வாமையை யேற்றுக்கொள்ளும் கரு நிறத்தால் கறையுற்ற திருக்கழுத்தை யுடையனாய்; தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட்கு - தெளிந்த ஒளியையுடைய மூவிலை வேலேந்திய ஒளிவிட்டு விட்டுத் திகழும் வேறு பல படைகளையுடைய காலக் கடவுளாகிய இறைவனுக்கு; உயர்க மாவலன் - மிக்குயர்க வென்றி எ - று. நிறத்தனும் அகலத்தனும் வில்லனும் ஆடலனும் சடையனும் விழவினனும் விரலனும் எழிற்றகையனும் நுதலனும் மிடற்றனுமாகிய காலக் கடவுட்கு வலன் உயர்க; அதனால் எல்லா உயிர்களும் இன்புறுக என்பது கருத்து. சடையன், நுதலன், மிடற்றன், அகலத்தன், விரலன், வில்லன், நிறத்தன், எழிற்றகையன், ஆடலன், விழவினனாகிய காலக் கடவுள் என வரற்பாலது செய்யுளாகலின் முறைபிறழ்ந்து வந்தது. எரிபோலும் நிறமுடையனாயினும், தண்ணிய அருளொளி திகழ நிற்றலின் “எரி எள்ளு வன்ன நிறத்தன்” என்றார்; சான்றோரும், “கழுமல மமர் எரியுரு நிற இறைவன்” (ஞானசம். 19:3) என்றார். “காமர்வண்ண மார்பில் தாரும் கொன்றை” (புறம். 1) எனப் பிறாண்டுங் கூறினமையின், ஈண்டு, “கொன்றையம் பைந்தா ரகலத்தன்” என்றொழிந்தார். வேறு எவராலும் எவ்வகையாலும் அழியாதவராய்த் திரிந்தமையின், திரிபுரத் தவுணரைப் “பொன்றார்” என்றும், அவரது மூன்றாகிய மதிலை எரிமுகப் பேரம்பு கொண்டு எரித் தழித்தது விளங்க, “எயிலெரி யூட்டிய வில்லன்” என்றும் கூறினார்; “திரிபுரம் தீமடுத்” தென்றார் நல்லந்துவனார். “மரம்பயில் கடிமிளை” (புறம.் 21) என்புழிப்போலப் பயிலுதல் செறிதல் மேற்று. இறைவன் இருளில் ஆடுவதை, ‘நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே’ என மணிவாசகனார் உரைத்தருளுவர். எல்லா உலகும் அழிந் தொடுங்குங்கால் இறைவ னொருவனே தனித்துநின்று ஆடுமிடம் சுடுகாடாதலின், “காடமர்ந் தாடிய ஆடலன்” என்றார், இக்குறிப்பே |