இறைவன் வெண்ணீறணியும் நிலையால் விளக்க முறுவதெனச் சான்றோர் கூறுப. புறம்புதை சடையன், தாழ்ந்த சடையன் என இயையும். வெண்மணி, முத்துமணி; பளிக்குமணியுமாம். இனி, இருகுறங்கிலும் பக்கத்தே கட்டப்பெறும் வெள்ளிய இம்மணிகள் ஆடுந்தோறும் இனிய ஓசை செய்தலின் “வெண்மணி குறங்கறைந்தார்க்கும்” என்றார். வாராற் கட்டப்படாது நுண்ணிய நூல்களாற் கட்டப்படும் சிறப்புக்குறித்துத் துடியை “நுண்ணூற் சிரந்தை” யெனச் சிறப்பித்தார். சிரற்பறவையின் சிறகு அசைவது போலத் துடிகொட்டுமிடத்துக் கைவிரல்களசைய விளங்கும் இசைநலம் தோன்றத் துடி, சிரந்தை யெனப்பட்டது. நிரல், நிரந்தென வருதல் போலச் சிரல் சிரந்தென நின்று சிரந்தை யெனப் பெயராயிற்று; பிறந்து சிறந்தவிடத்தைப் “பிறந்தை” (பரிபா. 11 உரை) என்பது போலச் சிரலினது செயற்கை நிகழிடம் சிரந்தை யென அமைந்த தெனக் கொள்க. இரட்டுதல் - மாறியொலித்தல். ஒருபாற் பெண்ணுருவாதலின், “இரண்டுருவாய்” என்றும். அதற்கேற்பத் தோடுங் குழையு மணிதலின், “ஈரணி பெற்ற எழிற்றகையன்” என்றும் கூறினார். ஈரணி பெற்ற எழிற்றகைமையைச் சேரமான்பெருமாள், “வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே, கலந்தான் வலநீறிடஞ்சாந் தெரிவலம் பந்திடமென், பலந்தார் வலமிட மாடகம் வேல்வல மாழியிடம், சலந்தாழ் சடைவலந் தண்ணங் குழலிடஞ் சங்கரற்கே” (பொன். 65) என்பது காண்க. ஏர்தல் - எழுதல் ; ஈண்டு வளர்தல் குறித்துநின்றது பண்பு, நிறத்தின்மேற்று. சூலம் - மூவிலை வேல். உயிர்கள் செய்யும் வினைக்குரிய பயனைக் காலமறிந் தூட்டும் கடவுளாதல் விளங்கக் “காலக் கடவுள்” என்றார். தொல்காப்பியனார், “பால்வரை தெய்வம்” என்றதும் இக்கருத்தே பற்றியென அறிக. உயர்கமா; மா: அசைநிலை. இப்பாட்டுப் பதிற்றுப்பத்தென வெளியாகியிருக்கும் தொகை நூலிற் காணப்பட்டிலது. ஆயினும், புறத்திணை யுரையில் நச்சினார்க்கினியரால் கடவுள்வாழ்த்துக்கு எடுத்துக்காட்டப்படும் இப்பாட்டு, பதிற்றுப்பத்தின் கடவுள்வாழ்த்துப் பாட்டாக இருக்கலாமென அறிஞர் பலரும் கருதுகின்றனர். ஆதலின் ஈண்டுக் கடவுள் வாழ்த்தாகக் கொண்டு உரை கூறப்பட்டது. மேலும், ஏனைத் தொகைநூல் பலவற்றிற்குக் கடவுள்வாழ்த்துப் பாடிச் சேர்த்தவர், பாரதம் பாடிய பெருந் தேவனாராதலால், இப்பாட்டும் அவர் பாடியதாக இருக்கலாமெனப் பலரும் எண்ணுகின்றனர். இதனை பாடியவர் பதிற்றுப்பத்து ஆசிரியர்களுள் ஒருவராதலுங் கூடும். |