பக்கம் எண் :

55

விளக்குதலால்,  இது செய்யுள் வகையு ளடங்கா தெனவும், எனவே
ஒரு  செய்யுளில்  ஒன்றே  யன்றிப்  பல வண்ணங்களும் வருமெனவு
மறிக.
  

பெயர் : இப்  பாட்டிற்குப்  பெயர்  ‘புண்ணுமிழ் குருதி’ யென்பது.
“அருநிறந்  திறந்த  (அடி  8) என முன் வந்த  அடைச்  சிறப்பானும்,
“மணிநிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, மனாலக் கலவைபோல” எனப்
பின்   வந்த  அடைச்  சிறப்பானும்  இதற்குப்  ‘புண்ணுமி்ழ்  குருதி’
யென்று   பெயராயிற்றெனப்   பழைய  வுரைகாரர்  இப்  பெயர்க்குக்
காரணம் காட்டுகின்றார்.
  

1 - 6. வரை மருள்...............களிறூர்ந் தாங்கு.  

உரை : வரை மருள் புணரி - மலைபோல் எழும் அலைகள்; வான்
பிசிர் உடைய - வெள்ளிய சிறு துளிகளாக வுடையுமாறு, வளி பாய்ந்து
அட்ட - காற்றுப் போந்து அலைக்கப்பட்ட; துளங்கு இரும் கமம் சூல்
- ஓலிட்டலையும் நிறைந்த நீரும்; நளியிரும் பரப்பின் - மிக்க  பெரிய
இடப்பரப்புமுடைய;  மாக்  கடல்  முன்னி  - கரிய கடற்குள் சென்று;
அணங்கு   உடைஅவுணர்  -  பிறரை வருத்துதலையியல்பாகவுடைய
அவுணர்கள்;  ஏமம்  புணர்க்கும்  -  அரணாக நின்று பாதுகாவலைச்
செய்யும்;   சூ   ருடை  முழுமுதல்  தடிந்தசூ  ரவன்  மாவினுடைய
மாமரத்தினை  வேருடன்  வெட்டிக்  குறைத்த;  பேரிசை  கடுஞ்சின
விறல்வேள்  - மிக்க புகழும் கடிய சினமும் விறலுமுடைய செவ்வேள்;
களிறு   ஊர்ந்தாங்கு   -   பிணிமுக  மென்னும்  யானை  யிவர்ந்து
சிறப்பாய்ந்ததுபோல,
  

“பிசிருடைய,     பிசிராகவுடைய      வென்றவா”     றென்பர்
பழையவுரைகாரர்.
  

புணரி,    அலை; “குடகடல், வெண்டலைப் புணரிநின் மான்குளம்
பலைக்கும்”  (புறம்  31)  என  வருதல்  காண்க;  பிசிர்  - சிறுதுளி,
“வெண்டலைக்  குரூஉப்பிசி  ருடைய”  (பதிற். 42) எனப் பிறாண்டும்
வரும்.  “நளியிரும்  பரப்பின் மாக்கடல்” எனக் கடலின் பெருமையும்
பரப்பும்  கூறுதலின்,  அத்தகைய கடல் துளங்குதற்கு ஏதுக் கூறுவார்,
“வளிபாய்ந்தட்ட”  என்றும்,  அதன்  விளைவாக “வரைமருள் புணரி
வான்பிசிர்   உடைய”   என்றும்   கூறினார்.  முகிற்கூட்டம்  படிந்து
முகத்தலால்  குறைவதும், யாறுகளாலும் மழையாலும் புனல் வருதலால்
மிகுவதுமின்றி,    எஞ்ஞான்றும்    நிறைந்திருத்தலின்,   “கமஞ்சூல்
மாக்கடல்”   என்றார்.   கமஞ்சூல்,  நிறைந்த  நீர்;  சூல் போறலால்
சூலெனப் பட்டதென்பர் பழைய வுரைகாரர், “மழைகொளக் குறையாது
புனல்புக  மிகாது,  கரைபொரு  திரங்கும்  முந்நீர்”  (மதுரை. 424-5)
என்று  பிறரும்  கூறுதல்  காண்க.  பிறர்க்குத் துன்பம் செய்தலையே
யியல்பாகவுடையராதலின்,  “அணங்குடை  யவுணர்”  என்றார். சூரன்
ஓம்பிய  மாமரம்,”  அவுணர் தம்முடனே யெதிர்ந்தார் வலியிலே பாதி
தங்கள்   வலியிலே   கூடும்படி  மந்திரங்கொண்டிருந்து  சாதித்தது”
(முருகு.  59,60,  நச்)  பற்றி,  அதனை யவன் அவுணர்க்கு ஏமமாகப்
புணர்த்து ஓம்பினா னென வறிக.