சூருடை முழுமுதல் என்றது, சூரவன்மாத் தனக்கரணாக வுடைய மாவின் முழுமுதல் எ - று; இனி, சூரவன்மாத் தான் ஒரு மாவாய் நின்றானென்று புராண முண்டாயின், சூரனாதற் றன்மையையுடைய மாவின் முதலென்றவாறு - ப - ரை. செவ்வேளது கடுஞ்சினம் அவுணரது மாவின் முழுமுதல் தடிதற்குத் துணையாய் அவுணரல்லாத ஏனை நல்லோர்க்கு நலம் பயந்தமையின், “பேரிசைக் கடுஞ்சின விறல்வேள்” என்று சிறப்பித்தார். “அவுணர் நல்வல மடங்கக் கவிழிணர், மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து, எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்” (முருகு. 59-61) என நக்கீரனார் கூறுதல் காண்க. முருகன் கடற்குட் புகுந்த, அவுணர் சூழ வாழ்ந்த சூரவன்மாவை யழித்த செய்தியை நக்கீரனாரும், “பார் முதிர் பனிக்கடல் கலங் கவுள் புக்குச், சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” (முருகு. 45-6) என்று கூறுதலாலு மறிக. முருகவேள் பிணிமுக மென்னும் களிறூர்தலை முருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியா ரெழுதிய வுரையாலு மறிக. மாக்கடல் முன்னி முழுமுதல் தடிந்த விறல்வேள் களிறூர்ந் தாங்கு. “யானைப் பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்த” என இயைத்துக் கொள்க. 7 - 16. செவ்வாய் ................... சேரலாத. உரை : செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப - கூரிய வாயினையுடைய வாட்படையானது எதிர்த்துக் குறுக்கிட்டு நிற்கும் பகைவரை யறுக்க; அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின் அவரது அரிய மார்பு பிளத்தலாலுண்டாகிய புண்ணினின் றொழுகும் உதிரத்தால்; இருங்கழி மணிநிற நீர் - பெரிய கழியிடத்து நீலமணி போலும் நீர்; நிறம் பெயர்ந்து - நிறம் மாறி; மனாலக் கலவை போல - குங்குமக் குழம்பினை நிகர்க்க; அரண் கொன்று பகைவர் அரண்களையழித்து; முரண்மிகு சிறப்பின் - வலி மிகுந்து விளங்கும் சிறப்பினால்; உயர்ந்த ஊக்கலை - உயர்ந்த மனவெழுச்சி யுடையையாய் ; பலர் மொசிந்து ஓம்பிய - பகைவர் தாம் பலராய்க் கூடிநின்று காத்த; அலர் பூங்கடம்பின் - மலர்ந்த பூக்களையுடைய கடப்ப மரத்தினை; கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - காவலமைந்த அடியோடு தடிந் தொழிக்குமாறு வீரரையேவி; வென்று எறி முழங்கு பணை செய்த - போரை வென்று அறையும் முழங்குகின்ற முரசினைச் செய்துகொண்ட; வெல்போர் - வெல்லும் போரினையும்; நார் அரி நறவின் - நாரால் வடிக்கப்பட்ட கள்ளினையும்; ஆர மார்பின் - ஆரமணிந்த மார்பினையும்; போர் அடு தானை - அஞ்சாது நின்று அறப்போர் புரியும் தானையினையுமுடைய; சேரலாத - சேரலாதனே, - மணிநிற நீரும் புண்ணுமிழ் குருதியும் கலந்தவழி இங்குலிகக் கலவையை நிகர்க்கு மென்பதே சிறப்பாயினும், குருதி மேன்மேலும் பெருகிப் பாய்தலின், அதன் செந்நிறமே மிகுவது கருதியே பழைய வுரைகாரரும் மனாலமென்றது, குங்குமம் என்றார். இங்குலிகத்தைக் கூறலும் குற்றமன்மையின், |