இமயம் தெற்கின்கண் ணுள்ள குமரி யாகிய இவற்றிற்கு இடைப்பட்ட நாட்டிலுள்ள; மன் மீக்கூறுநர் மன்னர்களுள் செருக்குற்று மீக்கூறும் மன்னர்களின்; மறம் தபக் கடந்து - மறம் கெட்டழியுமாறு வஞ்சியாது பொருது வென்று; மார்பு மலி பைந்தார் - மார்பிற் கிடக்கும் பசிய மாலை; ஓடையொடு விளங்கும் - ஓடை யளவும் தாழ்ந்து அதனோடு விளங்கும்; வலன் உயர் மருப்பின் - வெற்றியாலுயர்ந்த மருப்பினையுடைய; பழிதீர்யானை - குற்றமில்லாத யானையின்; பொலன் அணி யெருத்தம் மேல்கொண்டு பொலிந்த - பொன்னரிமாலை யணிந்த பிடரின் மேல் ஏறியிருந்து சிறக்கும்; நின் பலர் புகழ் செல்வம் - நின்னுடைய பலரும் புகழும் செல்வச் சிறப்பினை; இனிது கண்டிகும் - யாம் இனிது காண்கின்றோம், நீ வாழ்க என்றவாறு. கவரிமானும் நரந்தம் புல்லும் இமயமலைச்சாரலில் மிகுதியாகவுண்மையின் இவற்றை விதந்தோதினார். “நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி, குவளைப் பைஞ்சுளை பருகி யயல, தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும், வடதிசை யதுவே வான்றோ யிமயம்” (புறம். 132) என்று ஏணிச்சேரி முடமோசியாரும் கூறுவர். மேல்கொண்டு பொலிந்த நின் செல்வம் என முடிக்க. கவிர்ததை சிலம்பிற் றுஞ்சு மென்றது, ஆண்டுறையும் ஆரிய ராணையானே முருக்கென்னும் முள்ளுடை மரமும் “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா” (குறள். 969) என்று சிறப்பிக்கப்பட்ட தன் மயிர்க்கும் வருத்தம் செய்யாமையால், அக்கவிர் ததைந்த சிலம்பின்கண்ணே இனிதாக வுறங்குமென்றும், அருவியொடு நரந்தம் கனவு மென்றது, அவ்வாரிய ராணையானே பிற விலங்கானும் மக்களானும் வருத்தமின்றிப் பகற் காலத்துத் தான் நுகர்ந்த அருவியையும் நரந்தத்தையுமே கனவினும் காணும் என்றும், குமரியொடு என்னும் ஒடு எண்ணொடு; ஆயிடை யென்றது, இமயம் குமரியாகிய அவற்றுக்கு இடை என்றும், அவ்வென்னும் வகரவீற்றுப்பெயர் ஆயிடையென முடிந்தது என்றும், மன்னென்றதனை அரசென்றது போல அஃறிணைப் பெயராக்கி, அம் மன்களில் மீக்கூறுமெனக் கொள்க என்றும் கூறுவர் பழையவுரைகாரர். இனி, நெடுஞ்சேரலாதன் இமயம்வரை தன் புகழைப் பரப்பி, ஆங்கே மறம் செருக்கிய ஆரிய மன்னரை வென்று மேம்பட்டானாதலின், “ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம், தென்னங் குமரியொடாயிடை, மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே” யென்றார். “ஆரிய ரலறத் தாக்கிப் பேரிசைத், தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்” (அகம். 396) என ஆசிரியர் பரணரும், “வலம்படு முரசிற் சேரலாதன், முந்நீ ரோட்டிக் கடம்பெறிந் திமயத்து, முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து” (அகம். 127) என ஆசிரியர் மாமூலனாரும் கூறியிருத்தல் காண்க. இவ் விருவகை வெற்றிகளுள், இமயத்தில் விற்பொறித்து ஆரியமன்னரை வென்று பெற்ற வெற்றி பழமைத் தாயினமையின், அதனைக் குறிப்பா யுணர்த்தி, கடம்பர்பால் பெற்ற |